சபையும் உபத்திரவமும்!

இப்புதிய உடன்படிக்கையில், சபையின் மூலமாகத் தன் அநந்த ஞானத்தை உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் தெரியப்படுத்தும்படி தேவன் விரும்புகிறார்! (எபே 3:10).இந்த உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களும் அதிகாரங்களும் சாத்தானும் அவனுடைய பொல்லாத ஆவிகளின் சேனைகளுமே என எபேசியர் 6:12- ம் வசனத்தின்மூலம் அறிகிறோம்.

எல்லா மனுஷர்களுக்கும் நாம் கிறிஸ்துவின் சாட்சியாக விளங்கிட வேண்டும் என அறிந்திருக்கிறோம். ஆனால், இங்கு, நாம் பொல்லாத அசுத்த ஆவிகளுக்கும் சாட்சியாய் நின்றிட வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சாட்சி எப்படிப்பட்டது? தேவனுடைய ஞானத்திற்குப் புகழ் சேர்க்கும் சாட்சியே அது! “என் தேவன் என் வாழ்வின் ஒவ்வொன்றையும் தன் சம்பூர்ண ஞானத்தின்படியே ஒழுங்கு செய்திருக்கிறார்!” என பொங்கும் மகிழ்வோடு நம் ஆவி எக்காளமிட பறைசாற்றும் சாட்சி!!

யோபு தன் உத்தம ஜீவியத்தால், சாத்தானுக்கும் சாட்சியாக விளங்கினான் என யோபுவின் புத்தகத்தில் வாசிக்கிறோம். ஒருநாள், சாத்தான் பூமியெங்கும் உலாவி விட்டு தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றான். அவனிடம், “என் தாசனாகிய யோபுவின் உத்தம ஜீவியத்தைக் கண்டாயா?” என தேவன் வினவினார் (யோபு 1:8). அதற்கு சாத்தான், “நீர் யோபுவைச் சுற்றி மூன்று வேலிகளைக்கொண்டு காக்கிறபடியால்தான் அவன் உமக்குப் பயந்து நடக்கிறான்” என கூறினான். ஏனெனில், யோபுவைச் சுற்றி ஒரு வேலியும், அவன் குடும்பத்தைச் சுற்றி ஒரு வேலியும், அவனுக்குண்டான எல்லாவற்றையும் சுற்றி ஒரு வேலியுமாக மூன்று வேலிகள் இருப்பதைச் சாத்தான் அறிந்திருந்தான் (வசனம் 10). ஓர் உண்மையான இயேசுவின் சீஷனைச் சுற்றியும் தேவன் இவ்வித மூன்று வேலிகள் வைத்திருக்கிறார் என்பதை அனேக விசுவாசிகள் அறியவில்லையே! சீஷத்துவத்தின் மூன்று நிபந்தனைகளின்படி (லூக்கா 14:26-33) தன் ஜீவனையும், தன் நேசத்திற்குரியவர்களையும், தனக்குண்டான உடமைகளையும் தேவனிடம் சமர்ப்பணம் செய்வோருக்கு அதன் ஒவ்வொன்றையும் சுற்றித் தேவன் தன் வேலியை வைக்கிறார்!!

ஆனால், தேவனோ இந்த மூன்று வேலிகளையும் திறந்துவிட்டார் என தொடர்ந்து வாசிக்கிறோம்! முதலாவது, அவன் உடமைகள். இரண்டாவது, அவனின் நேசத்திற்குரியவர்கள். மூன்றாவது, அவன் சரீரம்! இப்போது, சாத்தான் இம் மூன்று பகுதிகளுக்குள்ளும் சென்று தன் கடும் தாக்குதலை தொடுத்துவிட்டான்! ஏன் தேவன் இவ்விதம் செய்தார்? தன் தாசன் யோபுவின் உத்தமத்தை இந்த சாத்தானுக்கு நிரூபிக்க வேண்டுமே, அதற்குதான்!!

முதலாவது, தேவனுடைய அனுமதியைப் பெறாமல், ஓர் இயேசுவின் சீஷனையோ அல்லது அவனுக்குண்டான யாதொன்றையோ சாத்தான் தொடமுடியாது என்ற உண்மையை இந் நிகழ்ச்சிமூலம் தெளிவாகக் காண்கிறோம். இச்சத்தியத்தில் நாம் அனைவரும் ஆழமாய் நிலைப்பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, இனிவரும் நாட்களில், இச்சத்தியமே நம்மைத் தாங்கி உதவிட வலிமைகொண்டதாக இருக்கும். ஏனெனில், ஆதி நூற்றாண்டுகளில் நடந்தது போலவே, உண்மையான இயேசு கிறிஸ்துவின் சபையானது இனிவரும் நாட்களில் உபத்திரவம் அடையப் போகிறது!

மேலும், யோபுவின் நிகழ்ச்சியில் நாம் கற்றறியும் உண்மையாதெனில், நமக்குச் சொந்தமான அன்பிற்குரியவர்களும் கிறிஸ்தவ மதவாதிகளும் நமக்கு விரோதமாக எழும்பி நின்று நம்மைக் குற்றம் சாட்டி விமர்சிக்கத் தொடங்குவார்கள். இங்கு யோபுவைப் பொருத்தமட்டில், அவன் மனைவியும், மூன்று மார்க்கத் தலைவர்களும் (எலிப்பாஸ், பில்தாத், சோப்பார்) அவனைத் தவறாகப் புரிந்துக் கொண்டு குற்றம் சுமத்தினார்கள். ஏனெனில், அவர்கள் அவ்விதம் செய்வதற்கு தேவனே அனுமதித்து வேலிகளைத் திறந்தார்!

யோபுவோ, தன்னைத் தாழ்த்தி, “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன், நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்றான் (யோபு 1:21). யோபு, தனக்கென்று எதையும் சொந்தமாக வைத்திராத உண்மை சீஷனாயிருந்தான். தான் வைத்திருந்த யாவும் உரிமைப்பூர்வமாக தேவனுக்கே உரியவைகள் என நன்கு அறிந்திருந்தான். தன் ஆண்டவர் அவைகளை தனக்குத் தருவதற்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதைப்போலவே, அவைகளை திரும்ப எடுத்துக்கொள்வதற்கும் உரிமை உண்டு என்பதையும் கண்டிருந்தான். ‘சீஷனாய் இல்லாதவர்களுக்கு’ தேவன் அவர்களுக்கு உலகப் பொருட்களைத தருவதுதான் ஆசீர்வாதம்! ‘சீஷனாய் இருப்பவர்களுக்கோ’ தேவன் உலகப்பொருட்களைத் தங்களைவிட்டு எடுத்துக்கொள்வதும் ஆசீர்வாதம்தான்! …சொல்லப்போனால், அது அவர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமே! நீங்கள் இயேசுவின் சீஷனா? இல்லையா? என்பதை இதன்மூலம் அறிந்துக்கொள்ளுங்கள்!!

யோபு தன் தைரியமான அறிக்கையில் முடிவுவரை நிலைத்திருக்க முடியவில்லை என்பது வருத்தமே. அடுத்தடுத்த கடுமையான சோதனைகளில் அவன் தொய்ந்து சோர்வுற்றான். தேவனைக் குறைகூறவும் ஆரம்பித்தான். அடுத்த 3 முதல் 31 அதிகாரங்கள் வரை யோபுவின் ஜீவியம் ஓர் ஏற்றத்தாழ்வுள்ளதாய் இருப்பதைக் காண்கிறோம். சிலசமயங்களில் அவன் உயர்ந்து தன் விசுவாசத்தை அறிக்கைச்செய்வான். சில சமயங்களில் தாழ வீழ்ச்சியுற்று துன்பத்திலும், முறுமுறுப்பிலும், தன்னை நியாயப்படுத்துவதிலும் துவளுவான். இதுதான் பழைய உடன்படிக்கை பரிசுத்தவான்களின் அனுபவமாயிருந்தது!

ஆனால், இப்போதோ, தேவன் புதிய உடன்படிக்கையின் கீழ் மேலான விசேஷித்த நன்மையை நமக்கு வாக்களித்திருக்கிறார் (எபி 11:40). அது தொடர்ச்சியாக, எபிரேயர் 12:1-3 வரை சொல்லப்பட்ட வசனங்களின்படி, முடிவுவரை நிலைத்திருந்து ஜெயம்பெற்ற இயேசுவை நாம் பின்பற்ற முடியும் என்ற மேன்மைதான்! இன்று நாம், யோபுவை அல்ல, இயேசுவை பின்பற்றுபவர்கள்! சோதனை எதுவாயிருந்தாலும், தேவகிருபையின் மூலமாக வல்லமை பெற்று, முடிவுவரை ஜெயம் பெற்றவர்களாய் சாத்தானுக்கு சவாலிடும் சாட்சியாய் இருந்திடமுடியும். இதனிமித்தம் நாம் யோபுவைக் கொஞ்சமேனும் குறைகூறிவிட முடியுமோ? ஒருக்காலும் முடியாது! ஏனெனில், அவன் வாழ்ந்த நாட்களில் மாம்சத்தினூடே செல்லும் புதிதும் ஜீவனுமான மார்க்கம் திறந்தளிக்கப்படவில்லை; கிருபை அருளப்படவில்லை; பரிசுத்தாவியானவரும் ஊற்றப்படவில்லை; தேவ வார்த்தைகளும் எழுதித்தரப்படவில்லை… இவ்வாறு எத்தனையோ காரியங்கள்! இவ்வித குறுகிய வரையறைக்குட்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்த யோபுவை எண்ணிப்பார்க்கும் போது, அவன் மிக அருமையாய் செய்தான் என்றே கூற வேண்டும். ஆம், தேவனே, அவனை மூன்று தடவை மெச்சிக்கொண்டார் (யோபு 1:8, 2:3, 42:7).

இன்று நாம், கிறிஸ்து நம்மைப்போன்ற மாம்சத்தில் வெளிப்பட்டார் என்ற சத்தியத்தில் தேவபக்தியின் ரகசியத்தைக் கண்டுகொண்டோம். நம் போன்ற மாம்சத்தில் வந்தபோதும், அவர் பரிசுத்தாவியினால் நீதியுள்ளவரென்று அறிவிக்கப்பட்டார். ஒவ்வொரு சோதனையிலும் பாவம் செய்யாதவராக தேவதூதர்களால் காணப்பட்டார் என்றும் 1தீமோ 3:16 -ல் வாசிக்கிறோம். இப்போது, ‘நாமும் தூதர்கள்’ காண்பதற்கு சாட்சியாக தேவனால் நிறுத்தப்பட வேண்டும் என்பதே நம் அழைப்பாகும்! (1கொரி 4:9).

இயேசுவானவர், ‘பாடுகளின் பல்கலைக்கழகத்தில்’ பயின்று பாஸாகிவிட்டார்! அங்கு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு ‘பூரணரானார்’ என்ற நற்சான்றிதழையும் பெற்றுவிட்டார்! இப்போது, இதே பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிற யாவருக்கும் கீழ்படிதலைக் கற்றுத்தரும்படி அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகிவிட்டார்! (எபி 5:8,9). இக்கல்வி கற்பதற்கு, பழைய உடன்படிக்கை போன்று ‘இதைச் செய்வாயாக, அதை செய்யாதிருப்பாயாக’ என்ற கட்டாயம் இல்லவே இல்லை. ஆனால், ஆவியும் மணவாட்டியும் இசைந்து நின்று நம்மை ‘இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்திட வருக’ என வாஞ்சித்து அழைக்கிறார்கள். ஆனால், ஒன்றுமட்டும் உறுதி! இப்பல்கலைக்கழகத்தில் சேராத ஒருவரும் சீஷனாகவே முடியாது. ஏனெனில், இங்குதான் ஓர் உண்மையான சீஷன் பூரண பயிற்சியைப் பெற்றிட முடியும்.

இயேசு தன் சீஷர்களிடம், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என அழுத்தமாகக் கூறினார். ஆகிலும், அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அவர் தாமே உலகத்தையும் அதன் அதிபதியையும் ஜெயித்தபடியால், சீஷர்களும் ஜெயம் பெற்றவர்களாய் மிளிர்ந்திடுவார்கள் (யோ 16:33).

இன்று இயேசுவைப் ‘போற்றுவோர்கள்’ ஏராளம்! அவரைப் ‘பின்பற்றுவோர்’ மிகவும் கொஞ்சம்! தன்னைப் புகழ்ந்து போற்றும்படி யாரையும் இயேசு அழைக்கவேயில்லை. அவரைப் பின்பற்றும்படியே அழைத்தார். அவரைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டால், அதன்பிறகு நாம் இவ்வுலகத்திற்குரியவர்களாய் இருக்கவே முடியாது. அப்போது, ‘இந்த உலகம் நம்மை நிச்சயம் பகைக்கும்’. இந்த உலகம் தனக்குரியவர்களையே சினேகிக்கும் என இயேசு அழுத்தமாகக் கூறினார் (யோ 15:19). இந்த உலகம் உங்களை வெறுக்குமென்றால், அதுவே நீங்கள் இயேசுவின் சீஷன் என்பதற்கு பிழையற்ற மிகத்தெளிவான அடையாளமாகும். ‘அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினால்’ ‘உங்களையும் துன்பப்படுத்துவார்கள்’ (யோ 15:20) என ஆணித்தரமாகக் கூறினார். மேலும், நீங்கள் இயேசுவின் சீஷன்தானா என்பதற்குரிய இரண்டாவது அடையாளம் யாதெனில், உங்களைப் பகைத்துத் துன்பப்படுத்துபவர்களை சினேகிப்பீர்கள்! (மத் 5:44-48). தேவனுடைய சத்தியங்களைக் கேட்பதற்குரிய செவிகள் உங்களுக்கு உண்டோ? அப்படியானால், இந்த இரண்டு அடையாளங்களைக் கொண்டு உங்களை நீங்களே பரிசீலித்து, நீங்கள் யார் என்ற உண்மையைக் கண்டுகொள்ளுங்கள்.

உலக மக்களோடோ அல்லது முழு இருதயமுள்ள சீஷர்கள் அல்லாத கிறிஸ்தவ மதக் குழுவினருடனோ நீங்கள் பிரபல்யமாய் இருப்பீர்களென்றால், நீங்கள் முழுக்க முழுக்க ஒத்தவேஷக்காரன் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இன்னமும் மனந்திரும்பக்கூட இல்லை எனவும் கூறலாம்.

இந்த உலகம் இயேசுவை ஏன் பகைத்தது? தன் வரியை அவர் ஒழுங்காகக் கட்டியதற்காகவோ அல்லது அவர் பரிசுத்த ஜீவியம் செய்ததற்காகவோ அல்ல! பின் எதற்கு? அதை இயேசுவே, “உலகத்தின் கியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சி கொடுக்கின்றபடியால், உலகம் என்னைப் பகைக்கிறது” என்றுச் சொல்லியிருக்கிறார் (யோ 7:7). ஆம், அவர் தயவு தாட்சண்யமின்றி மாய்மாலங்களை உரித்து அம்பலப்படுத்தினார். எனவே, மாய்மாலக்காரர்கள் அவரைப் பகைத்தார்கள்! மேலும், தேவஜனங்களின் மத்தியில் காணப்பட்ட தேவ வசனத்திற்கு முரணான பாரம்பரியங்களையும் பகிரங்கப்படுத்தினார். எவர்களெல்லாம் தங்கள் ‘முன்னோர்களின் பாரம்பரியங்களைக்’ கட்டிக் காக்க விரும்பினார்களோ, அவர்களும் பகைத்தார்கள்! ஆம், அவர் பேசியதுபோலவே, நாமும் வாயைத் திறந்து பேசவேண்டுமென்றால் நமக்கும் இதே கதிதான். மார்க்கத் தலைவர்கள் முதலானோரின் மனுஷீகப் புகழ்ச்சியை நீங்கள் தேடுவீர்களென்றால், உங்களை நீங்கள் ‘மௌனியாக’ வைத்துக்கொண்டு பிரபல்யமாக இருந்துகொள்ளலாம். உங்களுக்கு எந்தவழி வேண்டும்? அதை நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!

வெளிப்படுத்தின விசேஷம் 12- ம் அதிகாரத்தில் சாத்தான் சில குறிப்பிட்ட ஜனங்களோடு கடும்கோபங்கொண்டிருந்தான் என வாசிக்கிறோம். அவன் முதலாவது, ஸ்திரீ (இஸ்ரேல்) இவ்வுலகத்திற்கென பெற்றெடுத்த ஆண்பிள்ளையை (இயேசு கிறிஸ்துவை) பட்சித்துப்போடும்படி முயற்சித்தான். அதில் சாத்தான் தோல்வியுற்றான். அந்த ஆண்பிள்ளை (Man-child) வளர்ந்து தன் ஊழியத்தை நிறைவேற்றி தேவனுடைய சிங்காசனத்திற்கு ஏறிப்போனார் (வெளி 12:4,5). அதையடுத்து, சாத்தானுடைய கோபம் அந்த ஆண்பிள்ளையின் இளைய சகோதரர்கள்மீது திரும்பியது. ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களே (12:17) அவருடைய இளைய சகோதரர்கள்’ என விவரிக்கப்பட்டுள்ளது. தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய கற்பனைகளுக்குப் பூரணமாய் கீழ்படிந்து, இயேசு சாட்சி பகிர்ந்த ஒவ்வொன்றையும், தாங்களும் வாய்திறந்து சாட்சி பகர்ந்து, ‘இயேசுகிறிஸ்துவைப் பற்றி சாட்சியை’ உடையவர்களாக இருந்தனர். இன்று இப்பூமியில் இவ்விதம் யார் இருக்கிறார்கள்? மிகவும் கொஞ்சம்! அதேப்போல், தேவனுடைய கற்பனைகளுக்குப் பூரணமாய் கீழ்ப்படியும்படி பிரசங்கிக்கும் சபைகளும் இன்று மிகவும் கொஞ்சம்!!

இயேசு கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்ப வருவதற்கு முன்பான கடைசி மூன்றரை வருட காலத்திற்காக சாத்தான் இரண்டாம் வானத்திலிருந்து பூமியிலே விழத்தள்ளப்படுவான் (வசனம் 9). நம் காலச்சக்கரத்தின் கடைசிகால இந்நிகழ்ச்சியைத்தான் வெளிப்படுத்தின விசேஷம் 12- ம் அதிகாரம் சித்தரிக்கிறது. அச்சமயம், தேவனுடைய முழு கற்பனைகளுக்கும் கீழ்ப்படிபவர்களும், இயேசுகிறிஸ்துவைப்பற்றி தங்கள் தைரியமான சாட்சியின் அறிக்கையினால் ஜெயித்தவர்களும் இப்பூமியில் இருப்பார்கள்! (வசனம் 11). யார் இவர்கள்? தேவனுடைய வீரதளபதிகள்! இப்பூமியில் முகாமிட்டிருக்கும் விசேஷ பயிற்சிபெற்ற கர்த்தருடைய சேனை! ஆ, இச்சேனையில் இருப்பதுதான் என்னே பாக்கியம்! என்னே மகிமை! இச்சேனையில் அனேகர் தங்கள் சரீரங்களை இயேசுவிற்கு புகழ் சேர்க்கும்படி சாவுக்கு ஒப்புக்கொடுப்பார்கள். ஆம், வெளிப்பாடு 13:7- ன் படி அந்திக்கிறிஸ்து இயேசுவின் சீஷர்களைக் கொலைசெய்யும்படிக்கு அதிகாரம் பெற்றிருப்பான். ஆனால், தேவனே, அந்த வேலிகளைத் திறந்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்! இல்லாவிட்டால், நம்மை ஒருவரும் தொடக்கூட முடியாது! இதனிமித்தமே, நாம் அஞ்சவேண்டியதேயில்லை! மேலும், தேவன் உண்மையுள்ளவராயிருந்து நாம் திராணிக்குமேல் சோதிக்கப்பட அனுமதிக்கவேமாட்டார். ஒவ்வொரு சோதனையிலும் நாம் பாவம் செய்வதிலிருந்தும், அவரை மறுதலிப்பதிலிருந்தும் நாம் தப்பிக்கும்படியான வழியையும் உண்டாக்குவார் (1 கொரிந் 10:13). இக் கடுமையான சமயங்களிலும் அவர் கிருபை போதுமானதே என்பது நிருபணமாகும் (2கொரி 12:9). இல்லாவிட்டால், நம்மில் ஒருவரும் நிலைநிற்க முடியாதே! சுபாவத்தின்படியான தைரியசாலிகள்தான் நிற்பார்கள் என்றில்லை. கர்த்தரை தங்கள் நம்பிக்கையாகக் கொண்டு சுபாவத்தின்படி பயப்படுகிறவர்களும் பெலன் பெற்று நிலைநிற்பார்கள்!!

அந்திகிறிஸ்துவின் ஆட்சியே, மகா உபத்திரவத்தின் நாட்களாய் இருக்கும். மத்தேயு 24:21,22- ம் வசனத்தில் இயேசு கூறியதின்படி, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் (God’s Elect- The Church) அதாவது, ‘சபை அந்நாட்களில் கர்த்தருக்கு சாட்சியாக இப்பூமியில் இருக்கும்’ என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. தொடர்ந்து இயேசு கூறுகையில், ‘உபத்திரவம் முடிந்தவுடனே’ ‘மனுஷக்குமாரன் வானத்தில் வெளிப்பட்டு வலுவாய் தொனிக்கும் எக்காளத்தோடு தன் தூதர்களை அனுப்புவார். அவர்கள், ‘அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை’ (His Elect) கூட்டிச் சேர்ப்பார்கள் (மத் 24:29-31). 1தெச 4:16,17- ல் கூறப்பட்ட தேவ எக்காளத்தையே இயேசு இங்கு குறிப்பிட்டார். தேவ எக்காளம் தொனிக்கும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது, எழுந்திருந்து, உயிரோடிருக்கும் அவரின் சீஷர்களோடு கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கும்படி எடுத்துக்கொள்ளப்படுவார்கள். சபை ‘எடுத்துக்கொள்ளப்படுதல்’ (Rapture) மகா உபத்திரவத்திற்குப் பின்புதான் இருக்கும் என்பதை இயேசுவே தெளிவுப்படுத்திவிட்டார். இவ்விதம் இரண்டாவது வருகைதரும் நம் ஆண்டவரை ஆகாயத்தில் வரவேற்று அவரோடு ஆயிரம் வருடம் அரசாளும்படி பூமிக்குத் திரும்புவோம். கிறிஸ்துவோடு ஆயிரம் வருடம் அரசாளப்போவது யார்? ‘மிருகத்தையாவது, அதின் சொரூபத்தையாவது’ வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களே!’ (வெளி 20:4). ஆம், அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் தன் ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாய் நிலை நின்று ஜெயம் பெற்றவர்களே (கிறிஸ்துவின் மணவாட்டி) இப்பூமியில் அரசாளுவார்கள்!!

சபைக்கு விரோதமாக சாத்தானால், தூண்டப்பட்டு மனிதர்கள் மூலம் வருவதுதான் ‘உபத்திரவம்’. இது, பக்தியற்றவர்கள் மீது வரவிருக்கும் தேவ கோபாக்கினை இல்லை என்பதை நன்றாய் உணர்ந்துக்கொள்ளுங்கள். பழைய உடன்படிக்கை மக்களுக்கு, செல்வமும் சுகவாழ்வும் ஆசீர்வாதமாய் அருளப்பட்டது. புதிய உடன்படிக்கையின்கீழ் இருக்கும் நமக்கோ எதிர்ப்புகளும், பாடுகளும், உபத்திரவங்களுமே முன்வைக்கப்படுகிறது. கல்வாரி மரணத்தைச் சந்திக்கவிருந்த இயேசு, “பிதாவே, இந்த வேளையிலிருந்து என்னை இரட்சியும்” என்று சொல்லாமல் “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என்றே சொன்னார் (யோ 12:27,28). “பிதாவே, உபத்திரவத்திலிருந்து என்னை இரட்சியும்” என்பது வேசியின் பாடல். “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என்பது மணவாட்டியின் இனிய சங்கீதம்! ஆம், உபத்திரவங்களிலே நாம் மேன்மைபாராட்டுகிறோம். நாம் அநேக உபத்திரவங்களின் வழியாகத்தான் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் (ரோ 5:4 ; அப் 14:22).

ஆதி அப்போஸ்தலர்களின் காலத்தில் கேள்விப்படாத ஓர் உபதேசம் சுமார் 150- வருடங்களுக்கு முன் கிறிஸ்தவ உலகில் புகுந்தது. அது யாதெனில், விசுவாசிகள் மகா உபத்திரவத்திற்குள் செல்லாதபடி கிறிஸ்து ‘இரகசியமாய்’ வந்து விசுவாசிகளை எடுத்துக்கொள்வார் என்பதே! இந்த உபதேசம், மனிதர்களிடமிருந்து வரும் உபத்திரவம், ஏதோ தேவ தண்டனை என்பதுப்போல ஆகிவிட்டது. மேலும், இந்த உபதேசம் கிறிஸ்தவர்கள் உபத்திரவப்பட்ட நாடுகளிலிருந்து வரவில்லை. மாறாக, கிறிஸ்தவர்களுக்கு எந்த உபத்திரவமும் சம்பவிக்காத மேற்கத்திய நாடுகளிலிருந்தே இந்த உபதேசம் வந்தது. இந்த உபதேசத்திற்குப் பொருந்தும்படி வேத வாக்கியங்களையும் புரட்டிவிட்டார்கள். இவ்விதமாய், உபத்திரவம் வரும்போது, அதற்கு ஆயத்தமாயிராதபடி கிறிஸ்தவர்களைச் சாத்தான் போலியான ஆறுதலுக்குள் சும்மா இருக்க வைத்துவிட்டான்.

இன்று சிலர், கிறிஸ்துவானவர் முழு இருதயமானவர்களை எடுத்துக்கொண்டு முழு இருதயமற்றவர்களை அந்திகிறிஸ்துவைச் சந்திக்கும்படிச் செய்வார் எனப் போதிக்கிறார்கள். புத்தியுள்ள எந்தத் தளபதி ஜெனரலும் தன் முதல்தரமான படைகளை வீட்டில் இருக்கவைத்துவிட்டுத் தன் இரண்டாம் தரமான படைகளைப் போருக்கு முன்செல்ல அனுமதிக்கவே மாட்டான்! தனக்குச் சாட்சியாக நின்றிட அவசியமான நேரத்தில் தன் சிறந்த வீரர்களைத் தேவன் எடுத்துக்கொள்வார் என்பது சற்றும் சிந்திக்க ஒவ்வாது. அரைகுறை மனம் கொண்டவர்கள் மீது அல்ல; முழு இருதயமான கிறிஸ்தவர்கள் மீதே சாத்தான் கடும்கோபம் கொண்டிருக்கிறான். சாத்தானின் பிரதானமான தாக்குதலுக்கு இலக்காகியிருப்பவர்கள் யாரெனில், தேவனுடைய எல்லா கற்பனைகளுக்கும் கீழ்படிந்து அவ்வித கீழ்படிதலை மற்றவர்களுக்கும் போதிப்பவர்கள்தான்! எனவேதான், பவுல் தனக்காக மற்ற விசுவாசிகள் ஜெபிக்கும்படி வேண்டிக்கொண்டார். ஏனெனில், சாத்தான், தன்மீதே பிரதான குறிவைத்துள்ளான் என்பதைப் பவுல் அறிந்திருந்தார். இன்று நாமும் கூட, பூரண கீழ்படிதலைப் பிரசங்கிப்பவர்கள் காக்கப்படும்படி அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும்!!

முதல் மூன்று நூற்றாண்டுகளில், கிறிஸ்தவர்கள் மீது உபத்திரவம் பற்றியெரிந்தபோது, தேவன் அவர்களை அதன் நடுவிலிருந்து எடுத்துக்கொள்ளவில்லையே! அவர்களைச் சிங்கங்கள் பீறிட்டது! தீக்கம்பங்களில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டார்கள்! ரோமப்பந்தயத்திடலில் இயேசுவின் சீஷர்கள் கொடூரமாய் வெட்டப்பட்டார்கள். அப்போதெல்லாம் “ரகசிய” எடுத்துக் கொள்ளப்படுதல் இல்லையே! தானியேலின் நாட்களில், சிங்கத்தின் வாயைக் கட்டி, அக்கினிச்சூளையின் அகோரத்தை அவித்த தேவன், இயேசுவின் முழு இருதயதயமான சீஷர்களுக்கு அதுபோன்ற ‘அற்புதங்களைச் செய்யவில்லை’! ஏனென்றால், இவர்கள் அக்கினியினூடே தேவனை மகிமைப்படுத்தும்படி வந்த புதிய உடன்படிக்கையின் கிறிஸ்தவர்கள்!! இதே, நிலைதான் கடைசி நூற்றாண்டில் இருக்கும் இயேசுவின் சீஷர்களுக்கு அவரின் வருகைக்கு முன்பாக சம்பவிக்கும். ஆதி நூற்றாண்டுகளில், தேவனுக்கு உண்மையாக இருந்த அவரின் முதல்தரமான சேனைகள் முடிவுவரை நிலைத்திருந்தார்கள். தங்களைத் தப்பிக்கவைத்து எடுத்துக்கொள்ளும்படி பனிரெண்டு லேகியோன் தூதர்கள் வரவேண்டும் என அவர்கள் விண்ணப்பிக்கவோ அல்லது எதிர்பார்க்கவோ இல்லை. தேவனோ, தன் குமாரனின் மணவாட்டியை சிங்கங்கள் பீறிட்டதையும், தீக்கம்பங்களில் சுட்டெரிக்கப்பட்டதையும் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்! அவர்களின் தீரசாட்சியினிமித்தம் உள்ளம் பூரிக்க மகிமையடைந்தார்! இவர்களன்றோ ஆட்டுக்குட்டியானவர் எங்கு சென்றாலும், தங்கள் சரீரம் கொடூர மரணம் அடைந்தாலும் முடிவுவரை பின்பற்றியவர்கள்.!! இவர்களுக்கு இயேசு மொழிந்த பொன்னான வாக்கு இதுதான், “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்”

இதே வார்த்தைகளைதான் இயேசுகிறிஸ்து இப்போது நம்மோடும் பேசுகிறார். நாம் இனி வரவிருக்கும் அந்திகிறிஸ்துவின் நாட்களில் உண்மையாய் இருக்கவேண்டுமென்றால், இன்று நம் பாதையில் பிரவேசிக்கும் கொஞ்சமான சோதனைகளுக்கும் பாடுகளுக்கும் உண்மையாய் இருக்கவேண்டும்! இதனிமித்தமே, நம் அந்தரங்க வாழ்க்கையில் சிந்தைகள், நோக்கங்கள், பணவிஷயங்கள் போன்றவைகளில் சோதிக்கப்படும்போது, உண்மையாய் இருக்கவேண்டியது அவசியமாகிறது. இவையெல்லாம் கொஞ்சமான அற்ப விஷயங்கள்தான். ஆகிலும், இவ்வித கொஞ்சத்தில் நாம் உண்மையாய் இருந்தால் மாத்திரமே ஒருநாள் அநேகத்தில் உண்மையாக இருக்கமுடியும். இப்போது, நீங்கள் இக்கொஞ்சத்தில் உண்மையற்றிருந்தால் உபத்திரவத்தின் நாட்களான அதிகத்திலும் ஆண்டவருக்கு உண்மையில்லாமல்தான் இருப்பீர்கள்! இப்போது காலாட்களோடு நீங்கள் ஓடவில்லையென்றால், குதிரைகளோடு எப்படி ஓடுவீர்கள்? லேசான இந்நாட்களில் உண்மையாக இராவிட்டால், பிரவாகித்து வரப்போகும் உபத்திரவத்தில் எப்படி உண்மையாய் இருப்பீர்கள்? (எரே 12:5).வெகு சீக்கிரத்தில் வரப்போகும் அந்த நாட்களுக்கென்று, இன்று தேவன் நம்மைத் தன் வீர தளபதிகளின் சேனையாக பயிற்சியளிப்பதற்கு பேராவலோடு இருக்கிறார்!

காதுள்ளவன் எவனோ, அவன் கேட்ககடவன்! ஆமென்!

எழுதியவர் :  சகோ.சகரியா பூணன்