ஓர் தெளிவான சுவிசேஷம் கேளீர்!

“மறுபடியும் பிறக்க வேண்டும்” அல்லது “இரட்சிக்கப்பட வேண்டும்” என்றால் அர்த்தம் என்ன? என்பதை இந்தச் செய்தியின் மூலம் நான் விளக்க விரும்புகிறேன்.

இந்த அனுபவத்திற்கு “மனந்திரும்புதலே” முதல்படி ஆகும்! இவ்வாறு பாவத்திலிருந்து முழுவதுமாய் மனந்திரும்பி வருவதற்கு, பாவம் என்றால் என்ன? என்பதையும் நீங்கள் முதலாவது அறிந்திருக்க வேண்டும். இன்று வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில், மனந்திரும்புதலைக் குறித்து தவறான அபிப்பிராயம் ‘ஏராளமாய்’ இருப்பதற்குக் காரணம், பாவம் என்றால் என்ன? என்பதைக் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் ஏராளமான தவறான அபிப்பிராயங்களே ஆகும்.

கடந்த சில 10 அல்லது 20 – ஆண்டுகளாய் கிறிஸ்தவத்தின் தரமானது மிக மோசமாய் தாழ்ந்துவிட்டது. “சுவிசேஷமானது” (Gospel) சத்தியத்தின் சாரம் இல்லாமலே இன்றைய அனேக பிரசங்கிகளால் வெகுவாய் கலப்படம் செய்யப்பட்டு பிரசங்கிக்கப்படுகிறது. “இயேசுவை விசுவாசியுங்கள், அதுபோதும்!” என்றே ஜனங்களுக்கு கூறுகிறார்கள். ஆனால் `அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் இயேசுவை விசுவாசிப்பது மாத்திரம் யாரையும் இரட்சித்துவிட முடியாது!

ஆகவே, “மறுபடியும் பிறப்பது” கிறிஸ்தவ ஜீவியத்திற்கு ஓர் அஸ்திபாரமாய் இருக்கிறது. இந்த அஸ்திபாரத்தை போடாமலே `ஒரு நல்ல வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தால், உங்கள் கிறிஸ்தவமானது, இந்த உலகத்திலுள்ள மற்ற மார்க்கத்திற்கு ஒத்ததேயாகும்… ஏனெனில், பிற மார்க்கத்தாரும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழும்படிக்கே ஜனங்களுக்குப் போதிக்கிறார்கள். நாம் அனைவருமே ஓர் நல்ல வாழ்க்கையை நிச்சயமாய் வாழவேண்டும் என்பது உண்மைதான். ஆகிலும், அவ்வித வாழ்க்கை கிறிஸ்தவத்தின் கட்டிடங்களே அல்லாமல், அஸ்திபாரம் அல்லவே அல்ல! அஸ்திபாரமானது “நாம் மறுபடியும் பிறப்பதில்” மாத்திரமே உள்ளது. நாம் அனைவரும் இங்கிருந்துதான் துவங்க வேண்டும்.

தேவனுக்குப் பயந்து நீதியாய் வாழ்ந்த நிக்கொதேமு என்ற ஒரு மார்க்கத்தலைவனிடம் இயேசு பேசிக் கொண்டிருந்த பொழுதுதான் “மறுபடியும் பிறக்கவேண்டும்” என்ற பதத்தை யோவான் 3:3-ல்உபயோகித்தார். அவனைப் பார்த்து “நீ மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டாய்” (யோவான் 3:3) என ஆணித்தரமாய்க் கூறினார். ஆகவே, நீங்கள் மிகவும் நல்ல மனிதராய் இருந்தபோதும் நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்றால் “ஒரு ஆவிக்குரிய பிறப்பு” உங்களுக்கு அவசியமாய் இருக்கிறது! மேலும் இயேசு அவனிடம் கூறும்போது “அவர் (இயேசு) சிலுவையிலே உயர்த்தப்பட்டு மரிப்பார்” என்றும், அவரை விசுவாசிப்பவர்கள் நித்தியஜீவனை பெற்றுக்கொள்வார்கள் (யோவான் 3:14,16) என்றும் கூறினார்.

இயேசு அவருக்கு தொடர்ந்து கூறுகையில், மனுஷர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறபடியால், அவர்களின் கிரியைகள் பொல்லாததாய் இருக்கிறது (யோவான் 3:19) எனவும் கூறினார். இருப்பினும் `நேர்மையாய் இருப்பவர்கள்’ ஒளியினிடத்திற்கு வந்து இரட்சிக்கப்படுகிறார்கள் (யோவான் 3:21). ஆம், மறுபடியும் பிறக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒளியினிடத்திற்கு வரவேண்டும். அதாவது நீங்கள் தேவனிடத்தில் நேர்மையாக இருந்து, உங்கள் பாவங்களை அவரிடத்தில் அறிக்கை செய்ய வேண்டும். நீங்கள் செய்த எல்லாப் பாவங்களையும் நினைவுகூருவது உங்களால் முடியாததுதான்! ஆனால் நீங்கள் ஒரு பாவி என்பதை ஒத்துக்கொண்டு, நீங்கள் நினைவுகூரும் பாவங்கள் எதுவாயிருந்தாலும் அவைகளை தேவனிடத்தில் அறிக்கை செய்திட வேண்டும்.

பாவம் என்பது மிகப்பெரிய பகுதியாகும்! உங்கள் ஜீவியத்தின் ஆரம்பத்தில் “வெகு குறைவான பகுதியை மாத்திரமே” நீங்கள் பார்த்திட முடியும். அது எப்படியெனில், ஒரு பெரிய தேசத்தில் வாழும் நீங்கள் “ஒரு சிறிய பகுதியை மாத்திரமே” அறிந்திருப்பதைப் போலாகும்! ஆனால் நீங்கள் அறிந்திருக்கிற பாவத்திலிருந்து திரும்பி வரும்போது, கொஞ்சங் கொஞ்சமாய் உங்கள் ஜீவியத்தின் “பாவ-தேசத்தை” அதிக அதிகமாய் காண்பீர்கள்! இவ்வாறு நீங்கள் ஒளியில் நடக்கும்போது, உங்கள் பாவத்தின் அதிகமான பகுதிகளை நீங்கள் கண்டு, அதிலிருந்து அதிக அதிகமாய் உங்களை சுத்திகரித்துக்கொள்ள முடியும். எனவேதான், நீங்கள் தேவனுக்கு முன்பாக எப்போதும் நேர்மையாக நடக்க வேண்டும்!

மற்றொரு உதாரணத்தைக் கொண்டும் நான் விளக்குகிறேன்: தூசி படிந்த அனேக அறைகளைக் கொண்ட ஓர் வீட்டில் நீங்கள் வசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வேளையில், ஆண்டவராகிய இயேசு உங்கள் வீட்டிற்கு வந்து வாழ நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவரால் தூசி படிந்த அறைகளில் ஜீவித்திட முடியாது. ஆகவே, ஒவ்வொரு அறையாக சுத்தம் செய்வதற்கு அவரே உங்களுக்கு உதவி செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாய், முழு வீடும் இப்போது சுத்தமாகிவிடும். இவ்வாறாகவே, நம் கிறிஸ்தவ ஜீவியத்தில் நாம் பரிசுத்தத்தில் வளருகிறோம்!

அப்போஸ்தலனாகிய பவுல் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கு ஒவ்வொரு இடத்திலும் “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும்” (அப்.20:20) ஆகிய இந்த ஒரே செய்தியையே எல்லா இடங்களிலும் பிரசங்கித்ததாகக் குறிப்பிட்டார். நீங்கள் மறுபடியும் பிறப்பதற்கு, உங்கள் ஜீவியத்தில் இந்த இரண்டு பகுதியையும் வைத்து ஒரு நல்ல அஸ்திபாரம் போடுவது அவசியமாய் இருக்கிறது. மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் தேவனே ஒன்றாக இணைத்து வைத்திருக்கிறார். ஆனால் அனேக பிரசங்கிகள் இவைகளைப் பிரித்து வைத்துவிட்டார்கள்! இன்றைய சுவிசேஷ பிரசங்கங்களில் “மனந்திரும்புதல்” ஒதுக்கப்பட்டுவிட்டது. அனேக பிரசங்கிகளால் “விசுவாசம் மாத்திரமே” பிரசங்கிக்கப்படுகிறது!

ஆனால், உங்களிடம் விசுவாசம் மாத்திரமே இருக்குமென்றால் நீங்கள் ஒருக்காலும் மறுபடியும் பிறந்திட முடியாது! அது எப்படியெனில், ஒரு ஸ்திரீ தான் மாத்திரமே எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும் ஒரு பிள்ளையை பிறப்பிக்க முடியாது என்பதற்கு ஒப்பானதாகும். அதுபோலவே, ஒரு புருஷனும் தான் மாத்திரமே முயற்சித்து ஒரு பிள்ளையை பிறப்பிக்க முடியாது! ஒரு பிள்ளை பிறக்க வேண்டுமென்றால், ஒரு மனுஷனும் ஒரு மனுஷியும் ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்! அதுபோலவே மனந்திரும்புதலும், விசுவாசமும் ஒன்றாகச் சேர்ந்தால் மாத்திரமே “ஓர் ஆவிக்குரிய குழந்தை” பிறந்திட முடியும்! அதாவது, உங்கள் ஆவியில் “புதிய பிறப்பு” சம்பவித்திட முடியும். இந்த ஆவிக்குரிய பிறப்பும், சரீரத்திற்குரிய பிறப்பைப் போலவே “ஒரு கணப்பொழுதில்” நடைபெற்று விடுகிறது. அதாவது, இந்தப் பிறப்பு படிப்படியாக சம்பவிப்பதல்ல!

சரீரப் பிறப்பின் ஆயத்தநிலை வருவதற்கு சில மாதங்கள் ஆவதைப்போல், “புதுஜென்ம பிறப்பின்” ஆயத்தநிலைக்கும் சில மாதங்கள் ஆகக்கூடும். ஆனால், சரீரப் பிறப்பு கணப்பொழுதில் நடந்தேறுவதைப் போலவே, புதுஜென்மப் பிறப்பும் கணப்பொழுதில் நடந்தேறுகிறது. சில கிறிஸ்தவர்களுக்கு தாங்கள் அடைந்த புதுஜென்மத்தின் தேதி தெரியாதிருக்கிறார்கள். எனக்கும் என்னுடைய புதுஜென்ம தேதி தெரியாது. இதுவும், ஒருவனின் சரீரப் பிறப்பின் தேதி அவனுக்கே தெரியாமல் இருப்பதைப் போன்றதுதான். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல…. நீங்கள் உயிரோடிருக்கிறீர்களா? அதுபோதும்! இதைப் போலவே, இன்று நீங்கள் கிறிஸ்துவுக்குள் உயிருள்ளவர்களாய் இருக்கிறீர்களா? என அறிந்துகொள்வது மாத்திரமே மிகவும் முக்கியமாகும்.

“தேவனிடத்தில் செல்லுவதற்கு ஒரே வழி இயேசு!” என நாம் கூறுவது ஓர் குறுகிய மனப்பான்மை கொண்டதா?

இந்தக் கேள்விக்கு ஒரு திருஷ்டாந்தத்தோடு நான் பதில் கூறு விரும்புகிறேன்: தன் தகப்பனாரை ஒரு முறை கூட காணாதவர்கள் (அவருடைய புகைப்படத்தைக்கூட காணாதவர்கள்), அவர் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்? என அறிந்துகொள்ள முடியாது. இதைப் போலவே தேவனை ஒரு முறை கூட காணாத நாமும் அவரைப் பற்றி யாதொன்றும் அறிந்து கொள்ளவோ அல்லது அவரிடத்திற்குப் போகும் வழியை அறிந்துகொள்ளவோ முடியாது! ஆகிலும் இயேசு கிறிஸ்துவோ தேவனிடத்திலிருந்து வந்தவர்! ஆகவேதான் அவர் ஒருவர் மாத்திரமே தேவனிடத்திற்குச் செல்லும் வழியை நமக்குக் காண்பித்திட முடியும். இதை அவரே குறிப்பிட்டு “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) எனக் கூறினார்.

தேவனாகிய பிதாவினிடம் செல்லுவதற்கு “நானே வழி” என இயேசு உரிமையுடன் கூறியதை நாம் சிந்திக்கும் போது…. ஒன்று, அவர் கூறியது உண்மை என நாம் கூறவேண்டும்…. அல்லது, அவர் ஒரு பொய்யர் என்றும் ஒரு வஞ்சகர் என்றும் நாம் கூற வேண்டும்! இயேசுவை ஒரு பொய்யராகவும், ஓர் வஞ்சகராகவும் கூறிட நம்மில் யாருக்குத் தைரியம் உண்டு? இயேசுவை ஒரு நல்ல மனிதர் அல்லது ஒரு தீர்க்கதரிசி எனக் கூறுவது மாத்திரம் போதாது! ஆம், அவர் ஒரு நல்ல மனிதர் மாத்திரமல்ல, அவரே தேவனாயும் இருக்கிறார்! ஒருவேளை அவர் ஒரு பொய்யராகவோ அல்லது ஒரு வஞ்சகராகவோ இருப்பாரென்றால், ஒரு நல்ல மனிதராய்கூட இருந்திட முடியாதே!! ஆகவேதான், இயேசு மெய்யாகவே மனுஷர் சாயலில் வந்த தேவன் எனஅறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறோம்!!

“எல்லா சத்தியமும்” குறுகிய மனப்பாங்கு கொண்டதுதான்! கணிதத்தில் 2+2 எப்போதுமே 4-தான்! நாம் பரந்த மனப்பாங்குடன் 2+2 என்பதை 3 என்றோ அல்லது 5 என்றோ நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அல்லது 4-க்கு பதிலாக 3 . 9999 என்று கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது!! இதுபோன்ற கணித சத்தியத்தின் வேறுபாட்டை நாம் ஏற்றுக்கொண்டால், நம்முடைய கணிதப்பாடம் முழுவதும் தவறாய் போய்விடும். அதேபோல, பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது என நாம் அறிந்திருக்கிறோம். இப்போது, நாம் “பரந்த மனப்பாங்கு” (Broad mind) கொண்டிட தீர்மானித்து, வேறொரு சூத்திர விளக்கத்தை ஏற்றுக் கொண்டதினிமித்தம் “சூரியனும் பூமியைச் சுற்றி வருகிறது” எனக் கூறுவோமென்றால், நம்முடைய விண்வெளி கணக்குகள் அனைத்தும் தவறாய் போய்விடும்! அதுபோலவே, இரசாயனத்தில் H2O தான் தண்ணீர். இப்போது நாம் “பரந்த மனப்பாங்கு” கொண்டவர்களாய் H2O உப்பாகவும் இருக்கிறது எனக் கூறிட இயலாதே! ஆகவே சத்தியமானது எல்லாப் பகுதியிலும் முழு வடிவம் கொண்டதும், மிக மிக குறுகிய மனப்பாங்கு உடையதுமாகும்!? இதுபோலவே, தேவனுடைய விஷயத்திலும் இருக்கிறது.! பரந்த மனப்பாங்கு கணிதத்திலும், வான சாஸ்திரத்திலும், இரசாயனத்திலும் அபாயகரமான தவறுகளைக் கொண்டுவர முடியும். அதே போலவே, “தேவனை அறிந்துகொள்ளும் சத்தியத்திலும்” இருக்கிறது.

மானிடர்கள் அனைவருமே பாவிகள் என வேதாகமம் போதிக்கிறது! பாவிகளுக்காகவே இயேசுவும் மரித்தார்! சத்தியம் இவ்வாறு இருப்பதால், நீங்கள் இயேசுவிடம் “ஒரு கிறிஸ்தவனாய்” வந்தால் உங்களுடைய பாவங்களை அவர் மன்னித்திட மாட்டார்! ஏனெனில் அவர் கிறிஸ்தவர்களுக்காய் மரிக்காமல், பாவிகளுக்காகவே மரித்தார். யாரெல்லாம் இயேசுவிடம் வந்து “ஆண்டவரே, நான் ஒரு பாவி” எனக் கூறுகிறார்களோ அவர்கள் மாத்திரமே மன்னிக்கப்பட முடியும். யாதொரு மதத்தைச் சார்ந்து அங்கத்தினராய் நீங்கள் இருந்துகொண்டு, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட இயேசுவிடம் வரமுடியாது! ஏனெனில், அவர் பாவிகளுக்காகவே மரித்தார். நீங்கள் எப்போது அவரிடம் ஒரு பாவியாய் வருகிறீர்களோ “அப்போதே – உடனடியாக” உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்!!

நம் அனைவருக்குமே தேவன் ஒரு மனசாட்சியை தந்திருக்கிறபடியால் “நாம் பாவிகள்” என அறிந்து கொள்வது நம் எல்லோருக்கும் சுலபமாய் இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு “அதிக உணர்வுள்ள மனசாட்சி” இருக்கிறபடியால், எந்தத் தவறையும் துரிதமாய் உணர்ந்துகொள்வார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்து வரும் போது, அவர்களின் மனசாட்சி கடினமாகவும், உணர்வுத் தன்மை குறைந்ததாகவும் மாறிவிடுகிறது. மூன்று வயது பையன் ஒரு பொய் சொன்னால், அந்தப் பையனின் முகத்தில் குற்றம் `பளிச்சென’ காணப்படும்…. ஏனெனில், அந்தப் பையன் மனசாட்சியிலும் குற்றம் இருக்கிறது. ஆனால், இரண்டு -ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பையன் முகத்துக்கு நேராய் தைரியமாய் பொய் சொல்லுகிறான்! அது ஏனெனில், தன் மனச்சாட்சியின் குரலை திரும்பத் திரும்ப அசட்டை செய்து, தன் மனசாட்சியைக் கொன்று போட்டான்! ஒரு குழந்தையின் பாதம் மிக மென்மையாய் இருக்கிறபடியால், ஒரு இறகு வருடினால்கூட அதை அந்தக் குழந்தை உணர்ந்திட முடியும்! ஆனால் முதியோர்களின் பாதம் கடினமாய் இருக்கிறபடியால், ஒரு ஊசி குத்தினால்கூட அதை அவர்களால் உணர முடிவதில்லை! இவ்வாறாகவே, அவர்கள் வளரும் போது அவர்களின் மனசாட்சிக்கும் சம்பவிக்கிறது!!

மனசாட்சியானது தேவன் நமக்குள் வைத்த ஒரு குரலாய் இருக்கிறது! நாம் நீதிநெறிக்கு உட்பட்டவர்கள் என இந்த மனச்சாட்சிதான் நம் யாவரிடமும் கூறுகிறது. எது சரி? எது தவறு? என்ற ஒரு ஆரம்பநிலை உணர்வுகளை இந்த மனச்சாட்சி நமக்குத் தருகிறது! ஆகவே இந்த மனச்சாட்சி தேவன் நமக்குத் தந்த ஒரு ஆச்சரியமான வெகுமதியேயாகும். இயேசு, மனச்சாட்சியை “இருதயத்தின் கண்” என்றே அழைத்தார் (லூக்கா 11:34). இந்தக் “கண்ணை” நாம் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், ஒரு நாளில் நாம் முற்றிலும் ஆவிக்குரிய குருடர்களாய் மாறிவிடுவோம்! மனச்சாட்சியின் உறுத்துதலை அசட்டை செய்வது என்பது, ஒரு தூசியை உங்கள் கண்ணில் விழுந்துவிட்டதை அசட்டை செய்யும் அபாயத்திற்கு ஒப்பானதாகும். இந்நிலையில், ஒரு நாளில் நீங்கள் முற்றிலுமாய் ஆவிக்குரிய குருடராகிவிடுவீர்கள்!

குழந்தைகள் பிறக்கும்போது அவர்களில் ஒருவருக்கும் எந்த மதமும் இருப்பதில்லை. அவர்கள் அனைவரும் ஒரே போல் இருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் ஒரே போல் “சுயநலமும் தர்க்கமும் உடையவர்களாய்”இருக்கிறார்கள்! வருடங்கள் செல்லச் செல்ல, அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் நடத்தும் போதனையின்படி பல்வேறு மதங்களுக்கு அவர்களை உட்படுத்துகிறார்கள். இப்போது ஒவ்வொரு பிள்ளையும் வெவ்வேறு மதம் கொண்டவர்களாய் முற்றுப்பெறுகிறார்கள். சுமார் 90% மேலாகவே, ஒருவனுடைய மதம் அவர்களுடைய பெற்றோர்கள் அவனுக்குத் தேர்ந்தெடுத்து கொடுத்ததாகவே இருக்கிறது!

ஆனால் தேவனோ, நம்மை வெவ்வேறு மதங்களைத் தழுவிய ஜனங்களாய் காண்பதில்லை. நம்மைப் பாவிகளாகவே காண்கிறார்! சகல மனுக்குலத்தின் பாவங்களுக்காக மரிப்பதற்கென்றே இயேசு வானத்திலிருந்து இந்தப் பூமிக்கு இறங்கிவந்தார். தாங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைந்திட போதுமான அளவிற்கு நல்லவர்கள் எனக் கருதுகின்றவர்களுக்காக இயேசு வரவில்லை! மாறாக, தாங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைந்திட சிறிதேனும் தகுதியற்றவர்கள் என, தங்கள் நிலையை ஒத்துக்கொண்டவர்களுக்காகவே இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். “நீங்கள் ஒரு பாவி!” என உங்கள் மனச்சாட்சியே உங்களிடத்தில் சொல்லும்! அவ்வாறு இருக்க, நீங்கள் இயேசுவினிடத்தில் வந்து “ஆண்டவரே, நான் ஒரு பாவி! என் ஜீவியத்தில் ஏராளமான தவறுகள் செய்திருக்கிறேன்!!” என்று சொல்லுவதற்கு ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?

சிலர், இவ்வாறாக கேட்பதுண்டு: “ஒரு தகப்பன் தன் பிள்ளையை மன்னிப்பதைப் போல, ஒரு நல்ல தேவன் நம்முடைய பாவங்களை ஒரு பொருட்டாய் எண்ணாமல் நம்மை ஏன் மன்னித்திட கூடாது? எனக் கேட்கிறார்கள். ஒரு மகன் விலைமதிப்புள்ள ஒரு பொருளை உடைத்த பிறகு அல்லது தொலைத்த பிறகு,அதற்காக மனம் வருந்தி, தன் தகப்பனிடத்தில் மன்னிப்பு கேட்டால், அவனுடைய தகப்பன் அவனுக்கு நிச்சயமாய் மன்னிப்பார். ஆனால், இதுபோன்ற விஷயங்கள் “நீதி-நெறிக்கு” உட்பட்ட விஷயங்கள் அல்ல! நம்முடைய எல்லாப் பாவங்களும் இவ்வித சாதாரண விஷயங்களாய் இருந்தால், தேவன் நம்மை உடனடியாக மன்னித்திருப்பார். ஆனால் பாவமோ இதுபோன்று விஷயங்களாய் இல்லாமல் “பாவம் – ஒரு குற்றமாய்” இருக்கிறது!

ஒரு நீதிமன்றத்தில் வீற்றிருக்கும் நீதிபதிக்கு முன்பாக, அவருடைய மகனே சில குற்றத்திற்காக விசாரணைக்கு நின்றார். அந்த நீதிபதி தன் மகனைப் பார்த்து “மகனே நான் உன்னை நேசிக்கிறேன்! உன்னை நான் மன்னித்துவிட்டேன்! உன்னை தண்டித்துவிட மாட்டேன்!” எனக் கூறிட முடியுமா? நீதியின் ஓரளவு உணர்வு கொண்ட ஒரு நீதிபதிகூட இதுபோன்று செய்திட உடன்பட மாட்டார். சர்வவல்ல தேவனுடைய சம்பூர்ண நீதியில், நாம் பெற்றிருக்கும் நீதியின் உணர்வு வெகு குறைவானதே ஆகும்! ஏனெனில், நாம் தேவனுடைய சாயலிலேயே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நாம் ஏதாகிலும் நீதிக்குரிய தவறை செய்யும்போது, தேவன் ஒரு நீதிபதியாய் நமக்கு முன் நின்று, நம்மைப் பார்த்து “நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன். ஆனால், நீயோ இப்போது குற்றம் செய்திருக்கிறாய்! எனவே நான் உன்னை தண்டிக்க வேண்டியதாயிருக்கிறது!” என்றே கூறவேண்டியதாயிருக்கிறது. தேவனுடைய நீதிமன்றத்தில், ஒரு மகன் எவ்வளவுதான் தன் குற்றத்திற்காக மனம் வருந்தினாலும், ஓர் நீதிபதியாக இருக்கும் அவனுடைய தகப்பன் தன் மகனை தண்டித்தே தீரவேண்டும்! உதாரணமாய், அவருடைய மகன் ஒரு வங்கியை கொள்ளையடித்ததாக வைத்துக்கொள்ளுங்கள். நீதிபதியாய் இருக்கும் அவனுடைய தகப்பன் சட்டப்படி முழு தண்டனையும் வழங்கி, ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி நீதி வழங்கினார். ஆனால் அந்தத் தண்டத்தொகையை செலுத்த யாதொரு பணமும் அவனிடம் இல்லாதபடியால், அந்த மகன் சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும்! இந்தருணத்தில், அவனுடைய தகப்பன், நீதிபதி ஆசனத்திலிருந்து இறங்கிவந்து தன்னுடைய நீதிபதி அங்கிகளை கழற்றி வைத்தார்! பின்பு தன்னுடைய சொந்த காசோலை புத்தகத்தை எடுத்து `தன் ஜீவகாலமெல்லாம்’ சேர்த்து வைத்த ஒரு கோடி ரூபாயை தன் மகனுக்காக அந்தக் காசோலையில் எழுதி, தண்டத்தொகையை செலுத்தும்படி தன் மகனிடம் கொடுத்துவிட்டார். இத்தருணத்தில் அந்த மகன் “என்னுடைய தகப்பன் என்னை நேசிக்கவில்லை” எனக் குறைகூற முடியுமா? ஒருக்காலும் இல்லை! அதே சமயம், அந்த தகப்பன், நீதி நிறைந்த நீதிபதியாய் செயல்படவில்லை என ஒருவர்கூட அவரைக் குற்றம் சாட்டவும் முடியாது. அது ஏனென்றால், சட்டத்தின்படியான முழு தண்டனையையும் அவர் தன் மகனுக்கு வழங்கியிருந்தார். சற்றும் பிசகில்லாமல், தேவனும் நமக்கு இவ்வாறாகவே செய்திருக்கிறார். ஒரு நீதிபதியாய் நின்று “நம்முடைய பாவங்களுக்காய் நாம் மரிக்க வேண்டும்!” என பிரகடனம் செய்தார்! பின்பு, ஒரு மனுஷனாய் இறங்கிவந்து அந்த தண்டனை முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டார்!!

“தேவன் ஒருவரே” என வேதாகமம் நமக்குப் போதித்த போதிலும், அவரோ பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என மூன்று நபர்களாய் நிலைத்திருக்கிறார். தேவன் ஒரே நபராய் இருந்தால், அவர் பரலோகத்திலுள்ள தன் சிங்காசனத்தை விட்டு இந்தப் பூமிக்கு இயேசு என்ற பெயரில் ஒரு மனுஷனாய் இறங்கி வந்திருக்க முடியாது. அப்படி அவர் வந்துவிட்டால், அண்டசராசரத்தையும் யார் ஆட்சிபுரிந்து நடத்த முடியும்? ஆனால் தேவன் மூன்று நபர்களாய் இருக்கிறபடியால், பரலோகத்தில் நீதிபதியாய் வீற்றிருக்கும் தன் பிதாவுக்கு முன்பாக, நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும்படி குமாரன் இந்தப் பூமிக்கு இறங்கிவர முடிந்தது! சில கிறிஸ்தவர்கள், ஜனங்களுக்கு “இயேசுவின் நாமத்தில் மாத்திரம்” (Jesus Only)) ஞானஸ்நானம் கொடுப்பதுண்டு. அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் என்னவெனில், தேவத்துவத்தில், இயேசு என்ற ஒரே ஒரு நபர்தான் உண்டு என்பதுதான்! இது ஒரு பாழாக்கும் பெரிய பிழையாகும். ஏனெனில் 1யோவான் 2:22- ம் வசனம் கூறுகிறபடி, “பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து” என வாசிக்கிறோம். இந்தப் பிழையை ஏற்றுக் கொள்வதினிமித்தமாய், குமாரனாகிய தேவன் மனுஷர் சாயலாக வந்தார் என்பதையும்! அவர் தன்னுடைய மானிட சித்தத்தை மறுத்து பிதாவின் சித்தத்தை செய்தார் என்பதையும்! பின்பு, பிதாவாகிய தேவனுக்கு முன்பாக, நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் உரிய தண்டனையை தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதையும்! மறுதலிக்கிறவர்களாய் மாறிடுவோம்!!(1யோவான் 4:2,3)

ஆண்டவராகிய இயேசு இந்தப் பூமிக்கு வந்தபோது அவர் முழுவதும் தேவனாய் இருந்தார்! அவர் முழுவதும் மனிதனாய் இருந்தார்! அவர் சிலுவையிலே மரித்தபோது சகல மனுக்குலத்தின் தண்டனையையும் தன்மீது ஏற்றுக்கொண்டார். நம் பாவங்களுக்குரிய தண்டனை என்னவென்றால், தேவனை விட்டு நித்திய காலமாய் பிரிக்கப்படுவதுதான்! இயேசு சிலுவையிலே தொங்கியபோது, பரலோகத்திலிருந்த தன் பிதாவின் சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டார். இந்தப் பூமியில் மானிடர்கள் அடைந்திடும் யாதொரு துன்பத்தையும்விட தேவனை விட்டுப் பிரிக்கப்படும் துன்பமே மகா கொடியதாகும்!!

அண்டசராசரத்திலும், தேவனை விட்டு பிரிக்கப்பட்ட ஒரே ஸ்தலமாய் இருப்பதுதான் நரகம்! ஆனால், அங்கு தேவன் இருப்பதில்லை!! இந்த நரகத்தில், பிசாசிடம் உள்ள சகல தீமையும் முழு அளவில் தாண்டவமாய் இருக்கும். நரகத்திற்குச் செல்லும் அனைவருக்கும் “முழு அளவிலான இந்தத் தீமையே” கொடிய பயங்கரமாய் இருக்கும். இயேசு சிலுவையில் தொங்கியபோது, இவை யாவற்றுக்கும் உரிய தண்டனையை அனுபவித்தார்! அவர் சிலுவையில் 6-மணி நேரம் தொங்கினார். இருப்பினும், அந்தக் கடைசி 3-மணி நேரமும் அவர் தேவனால் கைவிடப்பட்டிருந்தார்! அவ்வேளையில் சூரியன் இருளடைந்தது, பூமி நடுங்கியது! பரலோகத்திலிருந்த தன் பிதாவிடம் இயேசு கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது! ஆம், கிறிஸ்துவுக்குப் பிதாவே தலையாயிருக்கிறார் (1 கொரி.11:3). ஆகவே கிறிஸ்து கைவிடப்பட்ட அந்த சமயத்தில், அவருடைய தலை திருகி பறிக்கப்பட்டுப் போனது. அவ்வேளையில் இயேசு அடைந்த துயரத்தின் கொடுமையை, நம்மால் முழுவதும் அறிந்துகொள்ள இயலாது!

இயேசுவும் நம்மைப்போல சிருஷ்டிக்கப்பட்டவராக மாத்திரம் இருந்தால், ஆதாம் தொடங்கி ஜீவித்த பல கோடி மானிடரின் தண்டனையையும் அவரே ஏற்றுக்கொள்வது ஒருக்காலும் முடியாது. அது எப்படியெனில், 100 கோடி கொலையாளிகளுக்காக ஒரு மனுஷன் தூக்கிலிடப்பட்டால், அது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு ஒப்பாகும்! ஆனால், இயேசு நித்திய தேவனாயிருக்கிறபடியால், அவரால் அந்தத் தண்டனையை ஏற்றுக்கொள்ள முடிந்தது!

மேலும், அவர் முடிவில்லா நித்தியத்திற்கு உரியவராய் இருந்தபடியால் “நித்திய நித்தியமாய்இருக்கவேண்டிய தண்டனையை” 3-மணி நேரத்திற்குள் அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது!!

இயேசுகிறிஸ்து தேவனாய் இல்லாமலிருந்து, பிதாவாகிய தேவன் அவரை நம்முடைய பாவங்களுக்காய் தண்டித்திருந்தால், அது மாபெரும் அநீதியாய் இருக்கும். ஏனெனில், ஒருவன் மற்றொருவனுடைய தண்டனையை தானே ஏற்றுக்கொள்ள விரும்பினாலும், ஒரு மனிதனுடைய குற்றத்திற்காக இன்னொரு மனிதனை தேவனால் தண்டித்திட முடியாது! உங்கள் ஆத்ம சிநேகிதராய் இருந்தாலும், உங்கள் தண்டனையை ஏற்றுக்கொண்டு உங்களுக்குப் பதிலாக உங்கள் நண்பன் தண்டிக்கப்பட முடியாது! அப்படி சம்பவித்தால், அது அநீதியாய் இருக்கும். ஆகவே, இயேசு சிருஷ்டிக்கப்பட்டவராக மாத்திரமே இருந்து நம்முடைய பாவங்களுக்காய் தண்டிக்கப்பட்டால் அது மிகப்பெரிய அநீதியாகும்!

எனவே, சிருஷ்டிக்கப்பட்ட ஒருவர் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள ஒருக்காலும் முடியாது என்பது மிகவும் தெளிவாய் இருக்கிறது. ஆம், தேவன் ஒருவர் மாத்திரமே அந்தத் தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியும்…. ஏனெனில், அவர் மாத்திரமே அண்டசராசரத்திற்கும் நீதிபதியாய் இருக்கிறார். நம்மை தண்டிப்பதற்கு எவ்வளவு உரிமை அவருக்கு இருக்கிறதோ…. அதேபோல, நம்முடைய தண்டனையை அவரே ஏற்றுக்கொள்வதற்கும் உரிமை உள்ளது! இதைத்தான், இயேசுகிறிஸ்து என்ற ஒரு நபராய் அவர் இந்தப் பூமிக்கு வந்தபோது செய்துமுடித்தார்!! கிறிஸ்தவ விசுவாசத்தின் அஸ்திபாரம் இரு பெரும் சத்தியத்திற்குள் அடங்கியிருக்கிறது: 1) மானிடரின் பாவங்களுக்காக கிறிஸ்து மரித்தார் .2) அவ்வாறு மரித்த பிறகு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்!

கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்காவிட்டால் “அவர் தேவனாய் இருந்தார்” என்பதை நிரூபிப்பதற்கு யாதொரு தடயமும் இல்லாது போயிருக்கும்! அவர் சொன்ன, உபதேசித்த அனைத்தும் உண்மை என்பதற்கு “மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுந்தார்” என்பதே நிரூபணமாய் நிலைத்து நிற்கிறது. மார்க்கத்தலைவர்களில் ஒருவர்கூட, உலகத்தின் பாவங்களுக்காக தாங்கள் மரிக்கப்போவதாக சொன்னது கிடையாது. அவர்கள் மரித்தார்கள்… ஆகிலும், அவர்களில் ஒருவர்கூட மரணத்திலிருந்து உயிர்த்தெழவில்லை. “இயேசுகிறிஸ்து ஒப்பற்றவர்” என்பதற்கு இந்த இரண்டு சத்தியங்களே போதுமானதாகும்.

நாம் தேவனுக்காக வாழவேண்டும் என்பதற்காகவே நாம் அனைவருமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் அனைவரும் நமக்காகவே வாழ்ந்திருக்கிறோம்! ஆகவே, நாம் தேவனிடத்திற்கு திரும்ப வரும்போது அந்த “மனந்திரும்பிய கள்வன்” திரும்பி வந்ததைப் போலவே நாம் மனந்திரும்பி வர வேண்டும்! ஆம், அவன் பல ஆண்டுகளாய் திருடியதைப் போலவே, நாமும் தேவனுக்காய் வாழவேண்டிய வாழ்க்கையைத் திருடிவிட்டோம்!! இவ்வாறு அவரிடத்தில் திரும்பும் நாம், கிறிஸ்து நமக்காக மரித்த நன்றியறிதலோடு திரும்ப வேண்டும். மேலும், அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதையும், இன்றும் அவர் ஜீவிக்கிறார் என்பதையும் விசுவாசித்து திரும்ப வேண்டும். இயேசு இன்றும் உயிரோடு இல்லை என்றால், அவரிடம் ஜெபிப்பது கூடாத காரியம், ஏனெனில் மரித்த ஒரு நபரிடம் நாம் ஜெபித்திட முடியாதே.!? ஆனால், இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தபடியால், நாம் அவரோடு உரையாடிட முடியும்!!

கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, வானங்களின் வழியாய் பரலோகம் திரும்பிவிட்டார். இதற்குப் பிறகுதான் தேவத்துவத்தில் மூன்றாவது நபராயிருக்கும் பரிசுத்த ஆவியானவர் இந்தப் பூமிக்கு இறங்கி வந்தார். இயேசுகிறிஸ்துவைப் போலவே, பரிசுத்த ஆவியானவரும் ஒரு மெய்யான நபராயிருக்கிறார்.!! நம்முடைய ஜீவியத்தை, தம்முடைய பிரசன்னத்தினால் நிறைக்கும்படியே அவர் இந்தப் பூமிக்கு இறங்கி வந்தார். நம்மை பரிசுத்த ஆவியானவருக்கு இணங்கி ஒப்புக்கொடுத்தால் மாத்திரமே, அவர் நம்மை பரிசுத்தமாக்கிட முடியும். பரிசுத்த ஆவியானவர் உங்களை நிறைத்துவிட்டால், நீங்கள் பாவத்தின்மீது ஒர் ஜெயங்கொண்ட வாழ்க்கையை வாழ்ந்திட முடியும்! இவ்வாறு, பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் மனுஷனுக்குள் இறங்கி வாசம் செய்ததற்கு முன்பாக, ஒருவராலும் இந்த ஜெய வாழ்க்கையை வாழ்ந்திட முடியவில்லை. பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பாக ஜனங்கள் வெளிப்புற ஜீவியத்தில் மாத்திரமே ஓரளவு தரமான வாழ்க்கையை வாழ முடிந்தது. ஆனால் உள்ளான ஜீவியத்திலோ எந்த மாற்றமும் இல்லாமல் பாவத்தினால் தோற்கடிக்கப்பட்ட வாழ்க்கையே வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை நிறைக்கும் போது, தேவனே உங்களுக்குள் வந்து ஜீவிக்கின்றபடியால், உள்ளான ஜீவியத்திலும் தேவபக்தி நிறைந்ததோர் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்திட பெலன் அளிக்கிறார்!

சுவிசேஷத்தின் ஆச்சரியமான செய்தி என்னவெனில், தேவன் உங்களை மன்னிக்கும்போது உங்கள் இருதயம் முற்றிலும் தூய்மையாகிட முடியும்…. பின்பு, பரிசுத்த ஆவியானவர் மூலமாய் கிறிஸ்து உங்களுக்குள் ஜீவிப்பதினிமித்தம் உங்கள் சரீரத்தை தேவனுடைய வீடாயும் மாற்றிவிடுகிறார்!

ஒரு சமயம், புகைபிடிக்கும் ஒரு கிறிஸ்தவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவரிடம், “உங்கள் சபையில் அமர்ந்து நீங்கள் சிகரெட் குடிக்க முடியுமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் “அது ஒருக்காலும் முடியாது! ஏனெனில், சபை கட்டிடம் தேவனுடைய வீடு!” என்றார். இப்போது நான் அவரை திரும்பிப் பார்த்து “சகோதரனே, உண்மையில் உங்கள் சரீரம்தான் தேவனுடைய வீடு! யாதொரு சபை கட்டிடமும் தேவனுடைய வீடு அல்ல!!” என்றேன். மேலும் “நீங்கள் உரைத்தது போல், ஒரு சபை கட்டிடத்திற்குள் விபசாரம் செய்ய மாட்டீர்கள்! சபை கட்டிடத்திற்குள் ஆபாச இணையதளத்தை பார்க்க மாட்டீர்கள்! ஆனால் கிறிஸ்து உங்களுக்குள் வாழும்போது, உங்கள் சரீரம்தான் இப்போது தேவனுடைய வீடாய் இருக்கிறது. ஆகவே உங்கள் சரீரத்திலுள்ள அவயவங்களை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறித்து மிகுந்த கவனமாய் இருங்கள்!” எனக் கூறினேன். ஆம் புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை மருந்து அருந்துதல் அல்லது அசுத்தமான எண்ணங்களை உங்கள் சிந்தைக்குள் வர அனுமதித்தல். . . . ஆகிய யாவும் உங்கள் சரீரத்தையும் உங்கள் மனதையும் கொஞ்சங்கொஞ்சமாய் அழித்துவிடும்!!

கிறிஸ்தவ ஜீவியம் ஒரு பந்தய ஓட்டத்திற்கு ஒப்பாயிருக்கிறது. நாம் பாவத்தைவிட்டு திரும்பி மறுபடியும் பிறந்தவுடன், இந்த ஓட்டப்பந்தயத்தின் துவக்க எல்லையில் வந்து நின்றுவிடுகிறோம். பின்பு இந்த பந்தய ஓட்டம் துவங்கி, உங்கள் ஜீவகாலமெல்லாம் தொடர்ந்து ஓடவேண்டும். நாம் ஓடுகிறோம்… ஓடுகிறோம்… ஓடிக்கொண்டே இருக்கிறோம்! இவ்வாறாக, ஒவ்வொருநாளும் பந்தய முடிவின் எல்லைக் கோட்டை நெருங்கி, நெருங்கிச் சென்று கொண்டேயிருக்கிறோம்! ஆனால், நாமோ நம்முடைய ஓட்டத்தை ஒருநாளும் நிறுத்திவிடக் கூடாது!

மற்றொரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால்: நாம் மறுபடியும் பிறந்தவுடன், நம் வீட்டிற்குரிய அஸ்திபாரத்தையே போடுகிறோம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் அஸ்திபாரத்திற்கு மேல் கட்டி எழுப்புகிறோம். அவ்வித கட்டிடம் பல மாடிகள் கொண்டதாய் எழும்புகிறது!!

இதுதான், இந்தப் பூமியில் நாம் வாழவேண்டிய மிகச் சிறந்த வாழ்க்கையாகும்! ஏனெனில், இதன் மூலமாய் உங்கள் ஜீவியத்திலுள்ள கெட்ட பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தூய்மை பெற்று… வருடங்கள் செல்லச் செல்ல நீங்கள் தேவனைப் போலவே அதிக அதிகமாய் உருமாறிவிடுவீர்கள்.!!

ஆகவே, இப்போது மறுபடியும் பிறப்பதற்கு நீங்கள் என்ன செய்திட வேண்டும்? . . . .

முதலாவதாக, நீங்கள் ஒரு பாவி என்பதை அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து “அவர்களைவிட நீங்கள் நல்லவர்கள்” போன்ற யாதொரு பொய்யான ஆறுதலையும் தேடாதிருங்கள். பாவம் ஒரு கொடிய விஷத்திற்கு ஒப்பானது! அந்த விஷத்தில் நீங்கள் ஒரு துளி குடித்தாலும் அல்லது நூறு துளிகள் குடித்தாலும் மரித்துப்போவீர்கள். ஆகவே உங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தில் ஓர் நல்ல ஆரம்பத்தை நீங்கள் துவங்கிட விரும்பினால் “இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு மகா கொடிய பாவியைக் காட்டிலும் நீங்கள் மேலானவர்கள் அல்ல!” என்பதை ஏற்று ஒத்துக்கொள்ளுங்கள். பின்பு, உங்கள் ஜீவியத்தில் நீங்கள் அறிந்திருக்கிற எல்லாப் பாவங்களிலிருந்தும் முழுவதுமாய் திரும்பிவிட தீர்மானம் செய்யுங்கள்!

பிறகு, கிறிஸ்துவை விசுவாசியுங்கள்! அதன் பொருள், உங்கள் முழுமையையும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணியுங்கள்! அது அல்லாமல் அவரைப் பற்றிய சில காரியங்களை உங்கள் மனதில் விசுவாசிப்பதென்பது பொருளாகாது! உங்களை முழுவதும் ஒருவருக்கு ஒப்புக்கொடுக்காமலே, நீங்கள் இன்னமும் அவரை விசுவாசித்திட முடியும். ஒரு மணப்பெண்ணிடம், திருமண நாளன்று இவ்வாறு கேட்பார்கள் “உன்னை இந்தப் புருஷனுக்கு முழுவதும் ஒப்புவிப்பாயா?:”. இந்தக் கேள்விக்கு அந்த மணப்பெண், “இவர் ஒரு நல்ல மனிதன் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால், என் முழு ஜீவியத்தையும், என் எதிர்காலத்தையும் இவருக்கே ஒப்புவித்திட எனக்கு விருப்பம் இருக்கிறதா என்பதை அவ்வளவு உறுதியாய் என்னால் சொல்ல முடியாது!” என பதில் கூறினால் என்னவாகும்?! ஆம், அந்த மணமகள் அவனை திருமணம் செய்திட முடியாது! ஏனென்றால், அவனிடத்தில் அவளுக்கு விசுவாசம் இல்லை. ஒரு ஸ்திரீ திருமணமானவுடன், அவளுடைய முழு ஜீவியத்தின் திசையும் மாறிவிடும்! தன்னுடைய பெயரில் உள்ள பின்பகுதியை மாற்றி, தன் புருஷனுடைய பெயரின் பின்பகுதியை அதில் சேர்த்துக் கொள்வாள். அவள் தன் பெற்றோர்களின் வீட்டை விட்டுவிட்டு, தன் கணவனோடு ஜீவித்திட புறப்பட்டுச் செல்கிறாள். தன் கணவன் எங்கு வாழப்போகிறார் என்பதைக்கூட அவள் அறியாதிருக்க முடியும். . . . ஆகிலும், தன் எதிர்காலத்தின் முழுமையையும் அவனுக்கே ஒப்புக்கொடுத்துவிட்டாள்! இப்போதுதான் “அவனிடத்தில் அவளுக்கு விசுவாசம் இருக்கிறது!”. இந்த விளக்கமே “கிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைப்பதின் பொருளாகும்”.

“கிறிஸ்தவன்” என்பதன் பொருளை பயபக்தியுடன் குறிப்பிட வேண்டுமென்றால் “திருமதி. கிறிஸ்து”அதாவது “Mrs.Christ” என்றே குறிப்பிட வேண்டும். என் மனைவி என்னைத் திருமணம் செய்த பிறகுதான், என் பெயரை தனக்கு உரிமையுடன் எடுத்துக்கொள்கிறாள். அதைப்போலவே, நீங்கள் கிறிஸ்துவை திருமணம் செய்துகொண்ட பிறகுதான், நீங்களும் கிறிஸ்துவின் பெயரை சொந்தம் பாராட்டி, உங்களை ஒரு “கிறிஸ்தவன்” என அழைத்துக்கொள்ள முடியும்! யாரோ ஒரு பெண், என்னைத் திருமணம் செய்து கொள்ளாமலே “திருமதி. சகரியா பூணன்” அல்லது “Mrs. Zac Poonen” என தன்னைச் சொல்லிக் கொண்டால், அது ஒரு பொய்யாகும்! இதைப்போலவே, கிறிஸ்துவை திருமணம் செய்து கொள்ளாமலே தன்னைக் கிறிஸ்தவன் என அழைத்துக் கொள்பவனும் “பொய்” சொல்லுகிறான்!!

திருமணம் என்பது கொஞ்ச நாட்களுக்குரியதாய் இல்லாமல், என்றென்றும் கொண்ட பந்தமாய் இருக்கிறது. அதைப்போலவே, ஒரு கிறிஸ்தவனாய் இருப்பதும், தன் ஜீவகாலமெல்லாம் கொண்ட ஓர் அர்ப்பணமாய் இருக்கிறது! கிறிஸ்துவுக்கு உங்களை முற்றிலும் அர்ப்பணிப்பதின் பொருள், நீங்கள் பூரணமடைந்துவிட்டீர்கள் என்பது அல்லவே அல்ல! ஒரு ஸ்திரீ திருமணம் செய்யும் போது “என்னுடைய ஜீவியத்தில் நான் ஒரு தவறும் செய்திடமாட்டேன்!” என வாக்குறுதி கொடுப்பதில்லை. அவள் அனேக தவறுகள் செய்திடக்கூடும். ஆகிலும் அவள் கணவன், அவளை மன்னித்து விடுகிறான். எனவே, அவள் வாக்குறுதி கொடுத்தது என்னவென்றால் “என் கணவனோடு நான் என்றென்றும் வாழ்வேன்!” என்பதேயாகும். இதுவே, நாம் கிறிஸ்துவோடு இணைந்து கொண்ட விளக்கமாய் இருக்கிறது.

அடுத்தபடியாக, நீங்கள் கண்டிப்பாய் செய்திட வேண்டியது “தண்ணீர் ஞானஸ்நானம்” எடுக்க வேண்டும். தண்ணீர் ஞானஸ்நானம் எடுப்பது, ஓர் திருமண சான்றிதழ் பெறுவதற்கு ஒப்பாகும்.! அதே சமயம், ஒரு திருமண சான்றிதழ் மாத்திரமே நீங்கள் பெற்றுக் கொண்டதால், நீங்கள் திருமணமானவர்களாய் மாறிவிட முடியாது. இதைப்போலவே, நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டால் மாத்திரமே “ஒரு கிறிஸ்தவனாய்” நீங்கள் மாறிட முடியாது! ஆம், நீங்கள் மெய்யாகவே திருமணம் செய்து கொண்ட பிறகுதான், நீங்கள் ஒரு திருமண சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்!! இதற்கு ஒப்பாகவே, உங்களை முழுமையும் கிறிஸ்துவுக்கு கொடுத்த பின்புதான், நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள முடியும்!! ஞானஸ்நானத்தில் நீங்கள் முழங்கும் சாட்சி என்னவெனில்,”என் பழைய ஜீவியத்திற்கு நான் முற்றுப்புள்ளி வைத்து, இயேசு கிறிஸ்துவை என் ஜீவியத்தில் ஆண்டவராய் ஏற்றுக்கொண்டேன்!” என்பதேயாகும்.

நல்ல கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் ஏராளம் பேசிக்கொள்வார்கள்! அதைப்போலவே, நீங்களும் இயேசுவிடம் பேசி, அவர் உங்களிடம் வேதப்புத்தகத்தின் மூலமாய் பேசுவதை “ஒவ்வொரு நாளும்” நீங்கள் செவிகொடுத்திட வேண்டும்!!

ஒரு நல்ல மனைவி, தன் கணவனுக்கு மகிழ்ச்சி தராத யாதொன்றையும், ஒருபோதும் செய்திட மாட்டாள்! எதைச் செய்தாலும், தன் கணவரோடு இசைந்து செய்திடவே விரும்புவாள்! ஒரு மெய்யான கிறிஸ்தவனும், “இயேசு பார்த்திட விரும்பாத சினிமாவைப் பார்ப்பது”…. போன்ற கிறிஸ்துவுக்குப் பிரியமில்லாத யாதொன்றையும் செய்திட மாட்டான்! ஆம், அவன் இயேசுகிறிஸ்துவோடு சேர்ந்து செய்திட முடியாத “யாதொன்றையும்” செய்திட மாட்டான்!!

“நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்கள்!” என்பதை உங்களால் நிச்சயித்துக்கொள்ள முடியுமா? ஆம், ரோமர் 8:16 கூறுகிறபடி, நீங்கள் மறுபடியும் பிறந்தவுடன் “பரிசுத்த ஆவியாகிய தேவன் தாமே, “நீங்கள் தேவனுடைய பிள்ளை” என உங்கள் ஆவியுடனேகூட சாட்சி கொடுக்கிறார்,” என வாசிக்கிறோம்.

இது ஓர் ஆச்சரியம் நிறைந்த அற்புத வாழ்க்கை! ஏனெனில், இவ்வுலகில் யாருக்கும் கிடைத்திடக்கூடாத “தலைசிறந்த நண்பரோடு!” நாம் வாழுகிறோம்!! நாம் ஒருபோதும் தனிமையாய் இருப்பதில்லை…. ஏனெனில், இயேசு எக்காலத்தும், எந்த இடத்திலும் நம்மோடு கூடவே இருப்பார்! நம்முடைய பிரச்சனைகளை அவரிடம் பகிர்ந்துகொண்டு, அதை தீர்ப்பதற்குரிய உதவியையும் அவரிடம் கேட்டிட முடியும். இந்த ஜீவியமே மகிழ்ச்சி நிறைந்த ஜீவியம்! கவலையிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை பெற்றிடும் ஜீவியம்!…. அது ஏனென்றால், இந்த நல்ல இயேசு “நம் எதிர்காலத்தை” தம்முடைய கரங்களில் வைத்து தாங்கியிருக்கிறார் என்பதேயாகும்!!

நீங்கள் மறுபடியும் பிறந்திட விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் இருதயத்தில் உண்மையான உத்தமத்தோடு கீழ்காணும் வாசகங்களை ஆண்டவரிடத்தில் இப்போதே சொல்லுங்கள்:

“ஆண்டவராகிய இயேசுவே, நீரே தேவனுடைய குமாரன் என நான் விசுவாசிக்கிறேன். நான் நரகத்திற்கே பாத்திரமான ஓர் பாவி! என்னை அன்புகூர்ந்து, என் பாவங்களுக்காய் சிலுவையில் நீர் மரித்ததற்காய் உமக்கு நன்றி. நீர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றும் ஜீவிக்கிறீர் என்பதை, நான் விசுவாசிக்கிறேன். இப்போதே, என் பாவ வாழ்க்கையிலிருந்து திரும்பிவிட நான் விரும்புகிறேன். என் எல்லாப் பாவங்களையும் மன்னித்து, “பாவத்தின்மீது வெறுப்பையும்” எனக்குத் தந்தருளும்! யாதொருவகையில், எனக்குத் தீங்கு செய்த ஒவ்வொருவரையும் “நான்” மன்னிக்கிறேன். ஆண்டவராகிய இயேசுவே, என் ஜீவியத்திற்குள் வாரும்! இன்று தொடங்கி, என் வாழ்வின் ஆண்டவராய் இருந்தருளும்! இன்றிலிருந்து என்னையும் “தேவனுடைய பிள்ளையாய்” மாற்றியருளும்!!”.

இப்போது, தேவனுடைய வார்த்தை கூறுவதைக் கேளுங்கள்: “கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12). ஆண்டவராகிய இயேசுவும் “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை!” என்றே கூறுகிறார் (யோவான் 6:37).

ஆகவே, அவர் உங்களை ஏற்றுக்கொண்டார் என்பதை நீங்கள் உறுதியாய் நிச்சயித்துக் கொள்ள முடியும்!!

இப்போது நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தி “ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை மன்னித்து, என்னை ஏற்றுக்கொண்டபடியால் உமக்கு நன்றி! தயைகூர்ந்து, உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிறைத்து, உமக்காகவே நான் வாழ்ந்திட எனக்கு வல்லமை தாரும்! இன்றிலிருந்து, உம்மை மாத்திரமே நான் பிரியப்படுத்திட விரும்புகிறேன்” என கூறிட உங்களால் முடியும்!!

இன்றிலிருந்து, ஒவ்வொருநாளும் நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசித்து, ஆண்டவர் உங்களைத் தம்முடைய பரிசுத்த ஆவியினால் ஒவ்வொருநாளும் நிறைக்கும்படியும் கேளுங்கள்! மேலும், மறுபடியும் பிறந்த மற்ற கிறிஸ்தவர்களோடு நீங்கள் ஐக்கியப்படுவதும் உங்களுக்கு அவசியமாய் இருக்கிறது. அப்போது மாத்திரமே, நீங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தில் வளர்ச்சியடைந்து, ஆண்டவரைத் தொடர்ந்து பின்பற்றிவர வல்லமை பெற்றிட முடியும்!! ஆகவே, ஓர் நல்ல சபைக்கு ஆண்டவர் உங்களை நடத்தும்படி அவரிடம் கேளுங்கள்!!

ஆண்டவர் உங்களை அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பாராக!

எழுதியவர் : சகோ. சகரியா பூணன்

மெய் சுவிசேஷம் வேண்டும்

பொதுவாக கூற வேண்டுமென்றால், கிறிஸ்தவர்கள் கீழ்காணும் வகைப்படி இரண்டு இரண்டு பிரிவினராக செயல்படுகிறார்கள்:

1. “ரோமன் கத்தோலிக்கர்கள்”-“புராட்டஸ்டாண்டுகள்.”இவர்கள் பிறப்பின் ஆதாரத்தின் படியான இரு குழுவினர்.

2. “எபிஸ்கோப்பல்” (Conformist) – “சுயாதீன சபையினர்” (Non-Conformist). இவர்கள் “சபை கட்டுப்பாட்டை” கைக்கொள்வதின் ஆதாரத்தின்படியான இரு குழுவினர்.

3. “மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்” – “பெயரளவில் கிறிஸ்தவர்கள்.” இவர்கள் “அனுபவத்தை” ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.

4. “சுவிசேஷத்திற்கு உட்பட்டவர்கள்” – “தாராள நோக்குடையவர்கள்.” இவர்கள் “உபதேசத்தை” ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.

5 “ஆவிக்குரியவர்” – “ஆவிக்குரியவர் அல்லாதவர்.” இவர்கள் “அந்நியபாஷை பேசுவதை” ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.

6. “முழு நேர கிறிஸ்தவ ஊழியர்கள்” – “வேலையில் இருந்துகொண்டே ஊழியர்கள்.” இவர்கள் “வேலையை” ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.

மேற்கண்டவாறே, இன்னும் பல வகையினர் இருக்கக்கூடும்! ஆனால் இதுபோன்ற வகையினர் ஒருவராயினும் “எந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆண்டவர் வந்தாரோ” அந்தப் பிரச்சனையின் வேர் பகுதியை அறிந்து அதை வீழ்த்திட கிரியை செய்திடவில்லை!!

இன்று அநேகர் “கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்” (1 கொரி. 15:3) என்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் எண்ணற்ற திரள் கூட்டத்தார், வேதாகமம் போதிக்கிறபடி “இனி நாம், நமக்காக பிழைத்திராமல் அவருக்காக பிழைத்திருக்க வேண்டும்” என்பதற்காகவும் கிறிஸ்து மரித்தார்! என அறியாமலே இருக்கிறார்கள் (2 கொரி. 5:15).

ஆகவே வேதாகமபூர்வமாய் கீழ்காணும் விதமாக கிறிஸ்தவர்களை வகைப்படுத்துவதே சாலச் சிறந்ததாகும்:

1. “தங்களுக்காக ஜீவிப்பவர்கள்”- “கிறிஸ்துவுக்காக ஜீவிக்கிறவர்கள்” அல்லது,

2. “தங்களுக்கானதை தேடுகிறவர்கள்” – “கிறிஸ்துவுக்கு உரியவைகளை தேடுகிறவர்கள்” அல்லது,

3. “மண்ணுக்குரியவைகளை முதலாவது தேடுகிறவர்கள்” – ” தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுகிறவர்கள்” அல்லது,

4. “பணத்தை நேசிப்பவர்கள்” – “தேவனை நேசிப்பவர்கள்.” ஏனெனில், லூக்கா. 16:13-ல்

இரண்டையும் நேசிப்பது ஒருக்காலும் முடியாது என இயேசுவே கூறியிருக்கிறார்!

காரியம் இவ்வாறிருக்க, மேற்கண்டவிதமாக இன்றைய கிறிஸ்தவர்கள் வேறுபடுத்திக் காண்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை! இவ்வித வகைப்படுத்தல், கிறிஸ்தவர்களின் அந்தரங்க உள்ளான வாழ்க்கையையும், தேவனோடு தனிப்பட்ட விதத்தில் நடந்திடும் ஜீவியத்தையும் ஆழமாக உணர்த்தக் கூடியதாக இருக்கிறது. ஆனால், முதலாவது குறிப்பிடப்பட்ட வகைப்படுத்தலோ, ஒருவனின் வெளிப்புற வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருக்கிறது. எப்படியிருப்பினும், இரண்டாவது வகைப்படுத்தப்பட்டபடியே பரலோகமும் கிறிஸ்தவர்களை வேறுபடுத்தி வகைப்படுத்துகிறது! “இந்த வகைப்படுத்தல்” மாத்திரமே ஜீவநாடியாக இருக்கிறது என்பதை ஒருவன் அறிந்திருக்க வேண்டும். இவ்வித வகைப்படுத்தலை ஆதாரமாகக் கொண்டு ‘மற்றவர்கள்’ நம்மை சீர்தூக்கிக் காண இயலாது. ஆம், நம்மை நாமே தான் வகைப்படுத்தி காணமுடியும். . . . அது ஏனெனில், நம்முடைய உள்ளான சுகங்களையும், விருப்பங்களையும் நாம் மாத்திரமே அறிந்திருப்பதன்றி, வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாது! நாம் எதற்காக ஜீவிக்கின்றோம்? என்பதை நம்முடைய மனைவிமார்கள் கூட அறிந்துகொள்ள முடியாது!

இந்த பூமிக்கு ஜனங்களிடத்தில் வந்து ஒரு உபதேசத்தைக் கொடுக்கவோ! அல்லது ஒரு சபைக் கட்டுக்கோப்பை கொடுக்கவோ! அல்லது அவர்களை அந்நியபாஷை பேசும்படி செய்வதற்கோ! அல்லது ஒரு அனுபவத்தைக் கொடுப்பதற்கோ கூட நம் ஆண்டவர் பிரதானமாக வரவில்லை!!

ஆம், “நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பதற்கே” அவர் வந்தார்! மரத்தின் வேரின்மீது கோடாரியை வைத்திடவே அவர் வந்தார்! ஏனெனில், பாவத்தின் வேரானது நம்மை மையமாக கொண்டிருப்பதும்! நமக்கானதைத் தேடுவதும்! நம்முடைய சுயசித்தம் செய்வதுமே! பாவத்தின் வேராயிருக்கிறது. நம்முடைய ஜீவியத்திலுள்ள “இந்த வேரை” கோடாரி வைத்து வீழ்த்திட நம் ஆண்டவருக்கு நாம் இடம் தரவில்லையென்றால், வெறும் “மேற்பூச்சு கிறிஸ்தவர்களாகவே” நிலைகொண்டிருப்போம்! வேண்டுமானால், நம்முடைய உபதேசத்தை வைத்து, அல்லது நம்முடைய அனுபவத்தை வைத்து, அல்லது நம்முடைய சபை கட்டுக்கோப்பை வைத்து. . . மற்ற கிறிஸ்தவர்களைவிட மேலான கிறிஸ்தவர்களாக ‘நாமாகவே நம்மை’ எண்ணிக்கொள்ளும்படி சாத்தான் நம்மை வஞ்சித்திட முடியும்!

நாம் இன்னமும் “நமக்காகவே ஜீவித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில்” அதாவது, நாம் இன்னமும் தொடர்ந்து “பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில்”. நம்மிடத்தில் சரியான உபதேசம் இருப்பதைக் குறித்தோ, அனுபவம் கொண்டிருப்பதை வைத்தோ, சரியான சபை கட்டுக்கோப்பு வைத்திருப்பதையோ சாத்தான் ஒரு பொருட்டாக ஒருக்காலும் எண்ணுவதே இல்லை! இன்றைய கிறிஸ்தவம் தனக்கானதைத் தேடும் கிறிஸ்தவர்களாலும், தங்களுக்காகவே வாழ்ந்திடும் கிறிஸ்தவர்களாலும் நிறைந்திருக்கிறது! இவ்வித லட்சணத்தில் வாழ்ந்து கொண்டு, மற்ற கிறிஸ்தவர்களைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என தேவன் தங்களைக் காண்பதாக இன்னமும் இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இவர்கள் கொண்ட ஆதாரம் எல்லாம் உபதேச வித்தியாசங்களும், சபைக் கோட்பாடும், அனுபவங்களுமே ஆகும்! இதைக் காணும்போது, இன்றைய கிறிஸ்தவத்தில் சாத்தான் எத்தனை பெரிய கிரியை செய்து சாதித்துவிட்டான் என்றே தோன்றுகிறது!

யோவான் 6:38-ல், தான் வானத்திலிருந்து பூமிக்கு எதற்காக வந்தேன்? என ஆண்டவர் தெளிவுபடுத்தினார்:

1. ஓர் மனிதனாக இந்த பூமிக்கு வந்தபோது அவர் பெற்றுக்கொண்ட “மானிட சித்தத்தை” வெறுப்பதற்கும்!

2. ஓர் மனிதனாகவே வாழ்ந்து பிதாவின் சித்தத்தை செய்வதற்கும் வந்தார். அதன் மூலமாக நமக்கு அவர் மாதிரியானார்!!

இந்தப் பூமியில் இயேசு வாழ்ந்த 33 ½ -ஆண்டுகளும், தன் சுயசித்தத்தை இயேசு வெறுத்து பிதாவின் சித்தத்தைச் செய்தார். யாரெல்லாம் தன்னுடைய சீஷர்களாக இருக்க விரும்பினார்களோ, அவர்கள் அனைவரும் அவர் சென்ற அதே வழியில்தான் சென்றிட வேண்டும் என தன் சீஷர்களுக்கு மிக ஆணித்தரமாக கூறினார். இவ்வாறு, நம் ஜீவியத்தில் “சுயசித்தம் செய்தல்” என்ற பாவத்தின் வேரை பலமாக தாக்கி, அதன் மூலம் நம்மை அக்கொடிய சுயசித்தத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே இயேசு வந்தார்!

விஞ்ஞான உலகில், அண்ட சராசரத்திற்கும் “பூமியே” மையத்திலிருக்கிறது என்ற தவறான கருத்தை, பல ஆயிரம் வருடங்களாக மனுஷன் கொண்டிருந்தான்! மனுஷருடைய கண்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. ஏனெனில், ஒவ்வொரு 24-மணி நேரத்திலும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி வருவதாகவே காட்சியளித்தது! நிரந்தரமாக கருதப்பட்ட இந்தக் கருத்தை சந்தேக கேள்வி தொடுத்த மன தைரியம் கொண்ட புருஷனான காப்பர்நிக்கஸ் என்ற பெயர் கொண்ட மனுஷன் எழுந்தான்! அண்ட சராசரத்தில் மாத்திரமல்லாமல், சூரிய மண்டலத்திலுமே கூட பூமி மையமாக இல்லை. இவ்வித தெளிவு, சுமார் 450 வருடங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது! சூரியனின் மையத்தில் இருக்கும்படியே பூமியானது சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது என இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தார். தவறான மையத்தை மனுஷன் கொண்டிருந்த காலம் மட்டும், அவனுடைய விஞ்ஞான கூட்டல் கழித்தல்கள் தவறாகவே இருந்தது. ஏனெனில், அவன் தெரிந்துகொண்ட மையம் தவறானது, அவ்வளவுதான்! ஆனால் மனுஷன் ‘என்று’ சரியான மையத்தை கண்டுபிடித்தானோ ‘அன்றே’ அவனுடைய கூட்டல் கழித்தலின் கணிதம் சரியாக மாறியது!

இதைப்போலவே தான், நாம் “தேவனை-மையமாக” கொண்டிராமல் “சுயத்தை-மையமாக” வைத்திருக்கும் காலம்வரை நடைபெறுகிறது!. இந்நிலையில், வேதாகமத்தை நாம் புரிந்துகொள்வதும், தேவனுடைய பரிபூரண சித்தத்தை அறிந்துகொள்வதுமாகிய நம்முடைய கூட்டலும் கழித்தலும் தவறாகவே இருக்கும். நாம் மேலே கண்டதுபோல், சுமார் 5000 வருடங்களுக்கும் மேலாகவே மனுஷன் தன்னுடைய கருத்தை சரி என்றே எண்ணியிருந்தான். அதுபோலவே, நாமும் நம்மை சரியென்றே எண்ணி வாடிழ்திருக்க முடியும்! ஆனால் உண்மை யாதெனில், நாம் நூற்றுக்கு நூறு தவறாகவே இருந்திருக்கிறோம்!!

இன்றும் இவ்வித நிலையில்தான் ஏராளமான “நல்ல கிறிஸ்தவர்கள்கூட” இருப்பதை நாம் காண்கிறோம். இவர்களிடம் “ஒரே வேதாகமத்தைக் குறித்து” பல்வேறுபட்ட வியாக்கியான விளக்கங்கள் தோன்றின. வேறுபட்ட இவர்களது விளக்கத்தில் “தன்னுடைய விளக்கமே சரியென” ஒவ்வொருவரும் ஆணித்தரமாக கூறினர். அந்த ஒவ்வொருவரும், மற்ற எல்லோருடைய விளக்கமும் தவறு என்றும், அந்த மற்றவர்களை “வஞ்சிக்கப்பட்டார்கள்” எனவும் கூறினார்கள்! ஏன் இந்த குளறுபடி? ஏனெனில், இவர்கள் கொண்டிருந்த மையம் தவறானது, அவ்வளவுதான்!

மனுஷன், தனக்குத்தானே மையமாயிருக்கும்படி சிருஷ்டிக்கப்படாமல் தேவனிடத்தில் மையமாயிருக்கும்படி சிருஷ்டிக்கப்பட்டான். கிறிஸ்தவர்கள் தாங்கள் கொண்ட மையத்தில் தவறாயிருக்கும் பட்சத்தில், அவர்கள் பெற்ற “சுவிசேஷமும்” நிச்சயம் தவறாகவே இருக்கும்!

அடிப்படைபூர்வமாக கூறுவோமென்றால், இன்று இரண்டு சுவிசேஷங்கள் மாத்திரமே பிரசங்கிக்கப்படுகிறது:

1) மனுஷனை மையமாக கொண்ட சுவிசேஷம்!

2) தேவனை மையமாக கொண்ட சுவிசேஷம்!

மனுஷனை மையமாக கொண்ட சுவிசேஷம், மனுஷனுக்கு அவன் வாழ்வில் தேவையான அனைத்தையும் தேவன் அவனுக்குத் தருவார் என்றே வாக்குறுதி வழங்குகிறது. அதன் மூலமாக இந்த பூமியில் அவன் வாழும் வாழ்க்கையில் சொகுசாக இருப்பது மாத்திரமல்லாமல், அவனுடைய ஜீவியத்தின் இறுதியில் ‘பரலோகத்திலும்’ அவனுக்கு ஒரு ஆசனத்தை வழங்கிடும் என கூறுகிறது. இன்று மனுஷனுக்கு சொல்லப்படுவதெல்லாம், இயேசு நம்முடைய அனைத்து பாவங்களையும் மன்னிப்பார்! நம்முடைய நோய்கள் அனைத்தையும் சுகமாக்குவார்! பொருளாதார ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் தருவார்! இந்த மண்ணின் பிரச்சனைகள் யாவையும் தீர்ப்பார்..என்றே சொல்லப்படுகிறது!!

ஆனால், இதுபோன்ற மனுஷனின் வாழ்வில் அவனுடைய சுயமே மையத்தில் நிலைகொண்டிருக்கிறது. . . அவன் ஒவ்வொரு ஜெபங்களுக்கும் பதிலளித்து, அவனுடைய விருப்பம் என்னவோ அதையெல்லாம் கொடுப்பதற்கு “அவனுடைய வேலைக்காரனாக” தேவன் அந்த மனுஷனைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறார்!! இதற்கு அந்த மனுஷன் என்ன செய்ய வேண்டும்? விசுவாசிக்க வேண்டும்! அனைத்து பொருளாதார ஆசீர்வாதங்களையும் இயேசுவின் நாமத்தில் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்! அவ்வளவுதான்!?

இதுவே பொய் சுவிசேஷம்! ஏனெனில், இந்த சுவிசேஷத்தில் “மனந்திரும்ப வேண்டும்” என ஒரு வார்த்தை கூட சொல்லப்படவில்லை. யோவான்ஸ்நானகன் தொடங்கி இயேசுவும், பவுலும், பேதுருவும் மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் “மனந்திரும்புதலையே” எல்லாவற்றிற்கும் முதலாக பிரசங்கித்தார்கள். ஆனால் இன்றோ. . . துரதிஷ்டவசமாக, “மனந்திரும்புதல்” கடைசிக்கெல்லாம் கடைசியாக பிரசங்கிக்கப் படுகிறது!!

இதற்கு நேர்மாறாக, தேவனை-மையமாகக் கொண்ட சுவிசேஷமோ “மனந்திரும்பும் படியே” மனுஷனை அழைக்கிறது! மெய்யான மனந்திரும்புதல் கீடிழ்க்கண்டவாறு மனுஷனுக்கு அறைகூவல் விடுக்கிறது:

1. ஒவ்வொருவரும் தங்கள் ஜீவியத்தில் மையமாக வீற்றிருக்கும் “சுயத்திலிருந்து” திரும்பிவர வேண்டும்!

2. தன் சுயசித்தம் செய்வதிலிருந்து திரும்பிவர வேண்டும்!

3. தானாக தெரிந்துகொண்ட வழியில் நடப்பதிலிருந்து திரும்பிவர வேண்டும்!

4. பணத்தை நேசிப்பதிலிருந்து திரும்பிவர வேண்டும் !

5. உலகத்தையும், உலகத்திலுண்டான மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமையிலிருந்து திரும்பிவர வேண்டும்!

எல்லாவற்றிற்கும் மேலாக,

1. தேவனிடத்திற்கு திரும்பிவர வேண்டும்!

2. தன் முழு இருதயத்தோடும் அவரை அன்புகூர திரும்பிவர வேண்டும்!

3. அவரையே தன் வாழ்வின் மையமாக வைத்து, இதுமுதற்கொண்டு அவருடைய சித்தம் செய்திட திரும்பிவர வேண்டும்!

“சிலுவையில் கிறிஸ்து அடைந்த மரணத்தின்மீது” கொண்டிருக்கும் விசுவாசம், அவன் மனந்திரும்பினால் மாத்திரமே அவனுடைய பாவங்களை மன்னித்திட முடியும்! அதன் பின்பு, பரிசுத்த ஆவி அபிஷேகத்தின் வல்லமையைப் பெற்று, அது அளித்திடும் பெலனைக் கொண்டு நாள்தோறும் தன் சுயத்தை வெறுத்து. . . அதனிமித்தமாக, தேவனை-மையமாக கொண்டதோர் வாழ்க்கையை அவன் வாழ்ந்திட முடியும்!! இந்த சுவிசேஷத்தையே, இயேசுவும் அப்போஸ்தலரும் பிரசங்கித்தார்கள்.

பொய்யான சுவிசேஷமோ, வாசலை விசாலமாக்கி வழியை அகலமாக்கித் தருகிறது. இதன் விளைவாக, ஒருவன் தன் சுயத்தை வெறுத்திட தேவையில்லை! அல்லது சுய ஆர்வத்தில் வாழும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் தேவையில்லை! தன் சொந்த ஆதாயத்தை தேடுவதை நிறுத்திடவும் தேவையில்லை! “இத்தனை பெரிய விசாலத்தில்” அவன் மிக எளிதாக நடந்து திரிகிறான்!! இன்றும், இந்த பொய் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் ஜனங்கள் கூடுகிறார்கள்! இந்த சுவிசேஷம் நடத்தும் வாசலில் பிரவேசித்து, அதன் விசாலமான வழியில் நடந்துகொண்டு, அந்தப் பாதை தங்களை ஜீவனுக்குள் நடத்தும் என்றே கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால், மெய்யாகவே மெய்யாகவே அழிவிற்கே இந்தப் பாதை அவர்களை நடத்திச் செல்கிறது! இந்தப் பொய் சுவிசேஷத்திற்கு “சுவிசேஷகராக” வலம் வந்தவரோ அகமகிழ்ந்து, தங்கள் கூட்டங்களில் “கரங்களை உயர்த்தி, கிறிஸ்துவுக்காக தீர்மானங்கள் எடுத்த” திரளான ஜனத்தின் எண்ணிக்கையை தன் ஊழிய அறிக்கையாக புகழ் பரப்புகிறார்! இவை அனைத்தும் ஓர் கொடிய வஞ்சகம். அதுபோன்ற கூட்டங்களில், தங்கள் நேர்மையின் நிமித்தம் மெய்யாகவே மனந்திரும்பியவர்கள் ஒருசிலர் இருந்தபோதிலும், . . . அங்கு “மாற்றமடைந்த” திரள்கூட்டத்தார்” இரட்டிப்பான நரகத்தின் பிள்ளைகளாகவே” (மத் .23:15)முற்றுப் பெறுகிறார்கள்! தங்கள் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்!

ஆகிலும் “மெய் சுவிசேஷமோ வாசலை சிறியதாகவும், வழியை இடுக்கமாகவுமே” வைத்திருக்கிறது. சில மார்க்க கண்மூடிகள் (CULTS) மாத்திரமே தங்களின் “நூதன ஆவிக்குரிய தன்மையால்” இயேசு வைத்த சிறியதும் இடுக்கமுமானதைவிட, இன்னும் அதிகமாக இடுக்கமாக்கி வைத்திருக்கிறார்கள்! மெய் சுவிசேஷமோ, இயேசு உருவாக்கிய “அதே அளவின்படியான” இடுக்கமான பாதையையே நமக்கு காட்டுகிறது. ஜீவனுக்குள் நடத்தும் இந்தப் பாதையை கண்டுபிடித்தவர்கள் வெகு சிலர்! மெய் சுவிசேஷத்திற்காக பாடுபடும் சுவிசேஷகர்களுக்கு “அறிக்கை சமர்ப்பித்திட” யாதொன்றும் பெரிதாக இருப்பதில்லை! அவர்கள் தரும் புள்ளி விவரங்கள் கவர்ச்சி தருவதாக இருப்பதுமில்லை! இருந்தபோதிலும், இந்த சுவிசேஷம் மெய்யாகவே ஜனங்களை ஆண்டவராகிய இயேசுவினிடத்திற்கும், பரலோக ராஜ்ஜியத்திற்கும் நடத்துகிறது!

“நீங்கள் எவ்வாறு கேட்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருங்கள்! தான் கேட்டவைகளுக்கு கீழ்ப்படிகிறவன் எவனோ, அவனுக்கே அதிகமான வெளிச்சமும் புத்தியும் தரப்படும்! ஆனால், தான் கேட்டவைகளுக்கு கீழ்ப்படியாதவன் எவனோ, அவன் ஏற்கனவே தான் பெற்றுக்கொண்டதாக எண்ணிய வெளிச்சமும், புத்தியும் அவனிடத்திலிருந்து எடுக்கப்பட்டுவிடும்!” (லூக்கா 8:18- விரிவாக்கம்).

கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!

எழுதியவர் : சகோ. சகரியா பூணன்

கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபை 

Pastor.D.தேவ இரக்கம் 

186 A, சர்ச் தெரு,
கண்ணம்பாளையம், செங்குன்றம், 
சென்னை  – 600052, 
தமிழ் நாடு , இந்தியா .

தொலைபேசி  : +91 9444 83 20 63
இ-மெயில் : [email protected] 

www kcachurch.org